பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

ஐங்குறுநூறு தெளிவுரை


பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
'நல்லன்' என்றி யாயின்

பல்லிதழ் உண்கண் பசத்தல்மற்று எவனோ?

தெளிவுரை : பெருங்கடற் கரையிடத்துச் சிறு வெண் காக்கையானது, பெரிய கழியிடத்தேயான நெய்தலைச் சென்று சிதைக்கும் துறையினைச் சேர்ந்தோனான தலைவனை, நீதான் நல்லவன் என்கின்றனை! அஃது உண்மையேயாயின், பலவான இதழ்களையுடைய பூப்போலும் மையுண்ட எம் கண்கள்தாம் அவன் கொடுமையினாலே வாடிப் பசப்பதுதான் யாது காரணமாகவோ?

கருத்து: 'அவன் பலநாள் பிரிந்து உறைதற்கு யாது காரணமோ?' என்றதாம்.

சொற்பொருள்: இருங்கழி - பெரியகழி. 'நெய்தல்' என்றது நெய்தல் மலர்களை. சிதைக்கும் - அழிக்கும்.

விளக்கம்: "நமக்கு இன்னாதன செய்து பிரிந்து போயினவன், போயின பரத்தைக்கும் அதுவே செய்யும் வன் கண்மை உடையனாயினான்; அவனை நல்லவன் என்கின்றாயே? எனினும், என்கண் அவனைக் காண விரும்புகிறதே? என் செயவேன்” என்று தலைவி வருந்தியுரைக்கின்றனள். தலைவியின் சால்பும் இதனாலே அறியப்படும்.

உள்ளுறை: காக்கை இருங்கழி நெய்தல் சிதைப்பதே போல, இவனும் பரத்தையர் பலருடைய நலன்களையும் வறிதே சிதைப்பானாயினான் என்பதாம். தனக்கு ஏதுமற்ற நெய்தலைக் காக்கை சிதைத்துப் பாழாக்குதலே போலத், தலைவனும் தனக்கு நிலையான அன்புரிமை அற்றவரான பரத்தையரை நலம் சிதைப்பான் என்றதும் ஆம். ஆகவே, அவரை வெறுத்த தாலேயே இங்கும் வர நினைக்கின்றான் என்கின்றனள்.

’அவன் நல்லவனானால் கண் பசப்பதேன்? கண் பசத்தலால் அவன் நல்லவன் அல்லன் என்று அறிவாயாக' என்றதுமாம்.