பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

ஐங்குறுநூறு தெளிவுரை


படியே இருப்பது தொண்டி. அதன் செழுமைபோலப் பணைத்த தோள்களையும், ஒள்ளிய தொடிகளையும் கொண்ட அரிவையாள், என் நெஞ்சினைக் கவர்ந்தாளாய்த் தன்னோடும் கொண்டு செல்வாளே!

கருத்து: 'என் நெஞ்சம் அவளோடேயே செல்லுகின்றதே’ என்றதாம்.

சொற்பொருள்: இன்னிசை - இனிதாக ஒலிக்கும் இசை. அளைஇ - கலந்து. இமிழ்தல் - முழங்கல். மறுகு - தெரு.

விளக்கம்: கடலலைகளின் முழக்கத்தோடே கலந்து மக்கள் முழக்கும் முழவுகளின் முழக்கொலியும் இனிதாக ஒலிக்கும் தெருக்களையுடையது தொண்டி என்பது, அதன் களிப்பான வாழ்வைப் புலப்படுத்தக் கூறியதாம். 'இன்னிசை' என்றது, கேட்பார்க்கு இனிமை தருதலோடு, மென்மேலும் கேட்பதிலே விருப்பமும் மிகச்செய்யும் இசையொலி என்றதாம். 'மறுகுதொறு இசைக்கும்' என்றது, ஒரு தெருவும் விடாதே எழுந்து ஒலிக்கும் என்பதாம். தெருத்தொறும் முழவொலி எழுதல், அங்கு வாழ்வாரின் மகிழ்வினைக் காட்டுவதாம். பணைத்தோளுக்கு அத்தகு தொண்டியை உவமை சொன்னது, அதுவும் நினைவில் அகலாதே நின்று களிப்பூட்டி வருதலால்.

உள்ளுறை: திரையொலியோடு முழவொலி கலந்து இனிதாக ஒலிக்கும் என்றது, உடன்போகும் ஆயமகளிரின் ஆரவார ஒலியோடு, எதிர் வருகின்றாரான உழையரின் மகிழ்ச்சியொலியும் ஒன்றுகலந்து இனிதாக எழுந்ததனை, வியந்து கூறியதாம்.

நீங்காதே தொடர்ந்து ஒலிக்கும் கடலலையோடு, காலத்தோடே மக்கள் முயற்சியால் எழுந்தொலிக்கும் முழவொலி சேர்ந்து ஒலிக்கும் என்றது, பிறவிதோறும் தொடர்ந்துவரும் தலைவன் தலைவியென்னும் தொடர் உறவோடு, அன்று தோன்றி நெஞ்சு கொண்டேகும் அன்புச்செறிவும் அவளைத் தன்னோடும் பிணைத்த செவ்வியை நினைந்து கூறியதாம்.

குறிப்பு : 'ஆயத்தோடும் உழையரோடும் கலந்துவிட்ட அவளை, இனி எவ்வாறு மீளவும் காண்போமோ?' என்னும் ஏக்கவுணர்வும், அவனுள்ளம் செயலற்று மெலிந்து சோர்ந்த எளிமையும், இதனால் உணரப்படும். ’வளைகடல் முழவின் தொண்டி’ என்று கடல் ஒலியை முழவொலிக்கு ஒப்பிட்டுக்