பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

ஐங்குறுநூறு தெளிவுரை


இரவுப்போதும் அவள் நினைவின் அழுத்தம் வருத்தலால் உறக்கத்தை ஓட்டியது என்றற்காம்.

தான் விரும்பியதைக் உள்ளுறை: 'வண்டிமிர் பனித்துறைத் தொண்டி' என்றது, 'அறுகாற் சிறு உயிர்க்கும் களிப்போடு பெற்று மகிழ்தற்கு உதவும் தொண்டி' என்று சுட்டி, தனக்கும் அவளை அடையும் மகிழ்வு வாய்க்கும் என்று கூறியதாம். 'கடல் ஒலித்தீ ஈர போல... துயிலறியேனே' என்றது, நினைவு அவளிடத்தேயும் துயிலிடத்தேயும் மாறிமாறிச் சென்று வருதலால், துயிலற்றேன் என்றதுமாம்.

உரவுக் கடல் ஒலித்திரை இரவினும் ஓயாதே எழுந்து மோதித் துன்புறுமாறுபோல, யானும் துயிலிழந்து உணர்வெழுந்து அலைக்கழிப்ப வருந்தியிருப்பேன் என்றதுமாம்.

மேற்கோள்: 'ஆக்கல் செப்பல்' என்பதற்குக் களவியலுரையுள இளம்பூரணர் இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். - (தொல். களவு. 9.).

173. அரவுறு துயரம்!

துறை : தலைமகன் குறிவழிச்சென்று, தலைமகளைக் கண்ட பாங்கன், தன்னுள்ளே சொல்லியது.

[து. வி : தலைமகன் குறித்துச் சொன்னவாறே சென்று தலைமகளைக் கண்டான் பாங்கன். அவளைக் கண்டதும் வியப்புற்றோனாக, அவன் தன்னுள்ளே கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

இரவி னானும் இன்றுயி லறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டி
தண்ணறு நெய்தலில் நாறும்

பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே!

தெளிவுரை : தொண்டி நகரத்துக் குளிர்ந்த நறுமணமிக்க நெய்தலைப்போல மணம்கமழும், பின்னப்பட்ட கருங்கூந்தலை உடையாளான இவளாலே தாக்கி வருத்தப்படுதலைப் பெற்றவர்கள், இரவு நேரமானாலும், இனிய துயிலைப் பெறாதே, பாம்பு தீண்டினாற்போலும் பெருந்துயரத்தையே அடைவார்கள்!

கருத்து : 'தலைவனின் பெருவருத்தம் இயல்பே' எனத் தெளிந்ததாம்.