பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

267


சொற்பொருள்: அரவுறு துயரம் - அரவாலே தீண்டப் பெறுதலினாலே கொள்ளும் துயரம் நொடிக்கு நொடி மேலேறிப் போதல். நாறும் - மணங்கமழும். அணங்குற்றோர் - தாக்கி வருத்தப் பெற்றோர்.

விளக்கம் : தலைவன் சொல்லியபடியே அவளைக் கண்டு, தலைவனின் மயக்கம் சரியானதுதானா என்று தெளியச் சென்றவன் பாங்கன். அவன் அவளின் பின்னலிடப்பெற்ற கருங்கூந்தலின் அழகு நலத்திலேயே தன்னை இழந்துவிட்டான். அதனின்று வந்த நறுமணம் நெய்தலின் குளிர்மணம் போன்று விளங்கும் கீர்த்தியும் உணர்ந்தான். ’இவளால் தாக்கி வருத்தம் செய்யப்பட்டவர்கள், இரவிலும் இனிய துயிலறியாராய், அரவுதீண்டியது போன்ற வேதனையையும் காண்பர். என்று வியந்து போற்றுகின்றான்.

குறிப்பு: கூந்தல் நெய்தலின் நாறுதல், அவள் நெய்தற் பூச்சூடுதலால். 'அரவுறு துயரம்’ என்றது, துயருற்ற அரவு சீறியெழுந்தும் அடங்கியும் வருந்துவதுபோன்ற துயரம் என்றதும் ஆகலாம். கண்மூடவும் அவள் கனவிலே தோன்ற ஆர்வமுடன், எழுபவன், காணாதே சோர்ந்து படுத்து மீளவும் கண்மூடவும், அவள் மீளவும் தோன்ற எழவுமாக வருந்தும் தொடர்ந்த துயிலற்ற துயரநிலை இது.

உள்ளுறை : தொண்டியின் தண்ணறு நெய்தல், தொலைவுக்கும் மணங்கமழ்ந்து உணர்வெழுச்சி யூட்டலே போலத், தன்னூரிலிருக்கும் அவளும் தொலைவிடத்தானை தலைவனிடத்தேயும் தன் நினைவாலே எழும் உணர்வு மீதூறச் செய்வாள் என்பதாம்.

மேற்கோள்: பாங்கன். தலைவனை நோக்கி. 'நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தாள்?' என வினாய், அவ்வழிச் சென்று தலைவியைக் கண்டனன் எனக் காட்டுவர் இளம்பூரணர் (தொல். களவு. II). பாங்கன். கிழவோனை இகழ்ந்ததற்கு இரங்கல் என்பர் நம்பியகப்பொருள் உரைகாரர்.

174. பொழிற்குறி நல்கினள்!

துறை : குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டுவந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.