பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி.: தலைவன் சொன்னபடியே சென்று, குறித்த இடத்திலே தலைமகள் நிற்பதைக் கண்டவனாகத் திரும்பவும் தலைவனிடம் வந்து, 'அவள் நிற்கின்றாள்' என்று சொல்லுகின்றான் பாங்கன். அதனைக் கேட்டதும், அங்குச் செல்ல நினைத்தானாகிய தலைவன். தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழை
பொங்கரி பரந்த உண்கண்

அம்கலிழ் மேனி அசைஇய எமக்கே.

தெளிவுரை : தெய்வம் இருத்தலை உடையதான குளிர்ந்த நீர்த்துறையையுடைய தொண்டியைப்போல மணங்கமழும் பொழிலின் கண்ணே, நுண்ணிய இழையினையும், மிகுந்த செவ்வரிபரந்த மையுண்ட கண்களையும், அழகு பொருந்திய மேனியையும் உடையாளான அவள், அவளை அடைதலையே நினைந்து மெலிந்தேமாகிய எமக்கும், அவளைக் காணற்குரிய தான இடத்தையும் ஈதெனக் குறித்துக் காட்டினள்.

கருத்து: 'அவ்விடத்தே சென்று அவளை அடைவேன்' என்றதாம்.

சொற்பொருள்: அணங்கு - தெய்வம்; நீருறை தெய்வம் என்பர். பொழில் - சோலை. நுணங்கு இழை - நுண்ணிய வேலைப்பாடமைந்த இழை. அரி - செவ்வரி ; 'பொங்கு அரி' என்றது மிக்கெழுந்த செவ்வரி என்றற்கு. அம்கலிழ் மேனி - அழகு ஒழுகும் மேனி. அசைஇய - மெலிவுற்ற.

விளக்கம்: நீர்த்துறையிடத்தே அணங்குகள் உளவாம் என்பதும், அவை அங்குச் செல்வாரைத் தாக்கி வருத்தும் இயல்பின என்பதும் முன்னோர் நம்பிக்கை. 'தொண்டிப் பனித்துறையும் அணங்குடைத்து' என்பது இச் செய்யுள். மணங்கமழ் பொழில் தொண்டி போல்வதெனவும், அவள் அதன்கண் அணங்கனையள் எனவும் பொருத்திக் கொள்க. 'நுணங்கிழை பொங்கும் அரி பரந்த உண்கண்' என்று கொண்டு, வளைந்த இழையான நெற்றிச்சுட்டி அசைந்தாடியபடி விளங்கும் செவ்வரி பரந்த மையுண்ட கண்' என்றும் பொருள் சொல்லலாம். மேனி அசைஇய - மேனியை நினைந்து மெலிவுற்று வாடிய. குறி நல்கினள் - சந்திக்கும் இடம் ஈதென்று குறித்துக் காட்டினள்.