பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

ஐங்குறுநூறு தெளிவுரை


மருதத்திணை பற்றிய இந்தச் செய்யுட்கள் நூறும், மருதநில மாந்தர்தம் வாழ்வுப் போக்கினையும், இல்லறப் பண்பு நலன்களையும், அகவாழ்வின் ஓழுகலாறுகளையும், நாமும் நன்கு உணரச் செய்வனவாகும்.

இம் மருதத்துள் — வேட்கைப் பத்து (1), வேழப் பத்து (2), களவன் பத்து (3), தோழிக்கு உரைத்தபத்து (4), புலவிப்பத்து (5) தோழி கூற்றுப்பத்து (6), கிழத்தி கூற்றுப்பத்து (7), புனலாட்டுப் பத்து (8), புலவி விராய பத்து (9), எருமைப் பத்து (10) எனப் பத்துப் பத்துக்கள் உள்ளன.

ஆதன், எழினி, அவினி, சோழன், கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் என்போர் குறிக்கப்பட்டுள்ளனர். தேனூர், ஆமூர், இருப்பை, கழாஅர் என்னும் ஊர்கள்பற்றிய செய்திகளையும் காணலாம்.

இந்நூலின் அமைப்பும், செய்யுட்கள் அமைந்து செல்லும் பாங்கும், அவை விளக்கிச் செல்லும் மனப்போக்குகளும், அவற்றைச் சொல்லாட்சிப்படுத்தும் சொல்நயமும், இந்நூல் அந்நாளைய பெரும்புலவர்கள் ஐவர், ஐந்திணை மரபுகளையும் ஒருங்கே தெளிவுபடுத்தும் பொருட்டாகத் திட்டமிட்டுச் செப்பமாகப் பாடியமைத்த செய்யுட்களின் தொகுப்பெனவே காட்டுவதாகும். இதனால், தனிச்செய்யுட்களை வகைப்படுத்தித் திணை துறைகளுக்கு ஏற்பத் தொகுத்த அகநூனூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் தொகை நூல்களினும் பிற்பட்டு எழுந்த தொகைநூலாதல் பொருந்தும். கலித்தொகைக்குப் பின்னர் எழுந்திருக்கலாம் என்றுகூடச் சொல்லக்கூடும்.

திட்டமிட்டுச் செய்யப்பெற்ற செய்யுட்கள் என்பதால், சொல்லிச் சொல்லும் பொருளின் அமைதியிலே இனிமை நயமும், வளமைச்செறிவும் மிகுதியாயிருக்கும் நலத்தினையும், நாம் உய்த்துணர்ந்து மகிழவேண்டும்; போற்ற வேண்டும்!