பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

273


குவித்த மணல்மேட்டின் உச்சியிடத்தே சென்று கிடந்து மலர்வதாயிற்று. நீரற்ற அவ்விடத்தும் முண்டக நறுமலர் மணம்கமழ்தலே போலத், தவறற்ற தலைவனிடத்தும் தவறுள போலத் தலைவிக்குத் தோன்றிற்று என்பதாம்.

பாட்டிலே சொல்லிய பொருளுக்கு ஒத்துமுடிவதனை உள்ளுறை உவமம் எனவும், புறமாகி வேறுபட முடிவதனை இறைச்சி எனவும் கொள்வது முறை. இதை நினைவிற்கொண்டே இக் கருப்பொருளை நோக்கல் வேண்டும்.

இறைச்சி: 'நீர் அறா நிலத்து முண்டக நறுமலர் கமழும் தொண்டியன்னோள்' என்றது, 'இவள் நாம் அணுகி நுகர்வதற்கு அரியவள்" என்று தலைவன் சொன்னதாம்.

குறிப்பு : 'இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் கமழும்' என்றது, அது அதற்குரிய இயல்பு அல்லவெனினும், மோதும் அலைகளாலே அவ்விடத்தே சேர்க்கப்பட்டது என்பதே உண்மையாகும். இவ்வாறே தலைவியின் உள்ளத்தே நின்பால் தவறு காணும் இயல்பு இல்லையேனும், அஃது அலருரை பகர்வார் இட்டுக்கூறியதனாலே நின்பால் ஐயற்று விளைந்த விளைவு என்று தோழி சமாதானம் சொல்வதாகச் சொல்லின், இது உள்ளுறை உவமமாக அமைந்து நிற்கும்.

'இவள் தோளுற்றோர் தவறிரைாயினும் பனிப்ப' என்றதை, 'இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் தன் தவறற்ற போதும், அலையின் மோதற் செயலாலே வருந்தி நடுங்கும்' என்றதனோடு இணைத்துப் பொருள் கூறலும் கூடும். நின்பால் தவறில்லை எனினும், நின் சூழ்நிலை காரணமாக இவளைக் காணவியலாதே நீ துயருட்பட்டு வருந்துவாயாயினை' என்று தலைவனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்ளலாம்.

"மணல் மேட்டின் உச்சியிடத்தே முண்டக நறுமலர் கமழும் தொண்டியன்னோள்" என்றது, அதன் மணத்தைப் பலரும் அறியுமாறுபோல, இவள் நலத்தையும் அறிந்தார் பலராதலின், இவளை வரைந்து கொள்ளற்கு அவரவர் முந்த விரைபவராவர்; அவ் வேற்று வரைவினை நினைந்தே இவள் வாடுவள்; அது தீர விரைந்து வந்து மணங்கொள்க' என்றதுமாம்.

ஐங். -- 18