பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

ஐங்குறுநூறு தெளிவுரை


178. வாழ்தல் ஒல்லுமோ?

துறை : தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது.

[து. வி. : தலைமகன், தோழியை இரந்து வேண்டித் தனக்குத் தலைவியை இசைவிக்கக் கேட்பவன், சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே - செங்கோற்
குட்டுவன் தொண்டி யன்ன

எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே?

தெளிவுரை: செங்கோன்மையாளனாகிய குட்டுவனின் தொண்டி நகரைப்போலும் என்னைக்கண்டு, நீயும் விருப்போடே அருள் செய்யாவிடத்து, இவளுடைய தோளும் கூந்தலும் பலவாகப் பாராட்டியபடி இவளோடு நெடுகிலும் கூடிவாழும் இல்வாழ்க்கைதான், எனக்கும் வாய்க்குமோ?

கருத்து: 'என் இல்வாழ்வுக்கு நீயே உறுதுணையாய் நின்று உதவுதல் வேண்டும்' என்றதாம்.

சொற்பொருள்: ஒல்லுமோ - பொருந்துமோ. எற்கண்டு - என்னைப் பார்த்து: நயந்து - விரும்பி. நல்காக்கால் - அருளா விட்டால்.

விளக்கம்: 'குட்டுவன் தொண்டி' எனத் தொண்டிக்குரிய சேரனைப் பற்றியும், 'அவன் செங்கோன்மை பிறழாதவன்' என்பான் 'செங்கோற் குட்டுவன்' எனவும் கூறினான், தானும் 'நெறிபிறழா நேர்மையன்' என்று தன் மேம்பாடு சுட்டிக் கூறுதற்காம்.

'நீ நல்காக்காலே... வாழ்தல் ஒல்லுமோ?" என்பான், தோழியைப் பெருமைப்படுத்திக் கூறி, மனத்தைத் தன்பால் இளகச்செய்தற்கு முயல்கின்றான்.

"தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல்" என்றது, உரிமையோடு, ஊரவர் வாழ்த்த வாழும் இல்லறவாழ்வினை. தழுவக் களிப்பூட்டும் தோளும், மலர்பெய்து எழில்கண்டு இன்புறும் கூந்தலும் சுட்டினான், அவளோடு பிரியாது கலந்து