பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

275


வாழும் இல்லற வாழ்வினைத் தான் உறுதியாக வேட்பதைத் தோழியாகிய அவட்கு உணர்த்தற்காம்.

'தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல் ஒல்லுமோ?' என்றது, நீ உதவாவிடில், யான் தோளும் கூந்தலும் பலவாகப் பாராட்டிக் கூடிமுயங்கி வாழ்கின்ற வாழ்வுப்பேற்றினைப் பெறுவேனோ? பெறேன் ஆதலின், நீதான் விரும்புதலோடு என் குறை முடித்தலும் வேண்டும்" என்று தலைவியையே குறையிரந்து நின்றதாகவும் கொள்ளலாம்.

மேற்கோள்: தோழியைக் குறையுறும் பகுதி என்பர் இளம்பூரணர் - (தொல். களவு. 12). மதியுடம்பட்ட தோழி, 'நீர் கூறிய குறையை யான் மறந்தேன்' எனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால், தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமை யையும் தலைவன் கூறுதல் இதுவென்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு. 11).

179, நின்னலது இல்லா நுதல்!

துறை : குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

[து. வி.: பகற்குறியிடத்தே கூடி மகிழ்ந்தனர் காதலர்கள். தலைவனும் பிரியா விடைகொண்டு பிரிகின்றான். பிரிந்து போகும் அவனைத் தனியே வழியில் எதிர்ப்படும் தோழி விரைவிலே அவர்கள் மணத்துக்கு முயலுமாறு வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே

நின்னல தில்லா இவள்சிறு நுதலே!

தெளிவுரை: பெருநீரான கடலின் கரையிடத்தோனாகிய சேர்ப்பனே! அலவன் தாக்குதலினாலே நீர்த்துறையிடத்தேயுள்ள இறால்மீன்கள் புரள்கின்றதும் இனிதான் ஒலியைக் கொண்டதுமான தொண்டியின் எழில்போலும் இவளது சிறுநுதலின் அழகானது, நின்னைத் தன் அருகாமையிலேயே