பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. வேட்கைப் பத்து

'வேட்கை' என்பது விருப்பம் ஆகும்; புறத்தொழுக்கிலே நெடுநாள் ஒழுகிய தலைவனின் உடனுறைவின்பம் பெற்றிலாத காலத்திலே. தலைவியின் மனவேட்கை எவ்வாறு பொறுப்புணர்வோடு சென்றது என்பதும், அவள் நலத்தையே கருதிய வரான தோழியரின் மனவேட்கை எவ்வாறு நிகழ்ந்தது என்பதும், இதன்கண் விரிவாக உரைக்கப்படுகின்றன.

தானிழந்த கூட்டத்தின் இன்பம்பற்றிய மனக்குறையும், தன்னை ஒதுக்கிச் சேரிப்பரத்தையரை நச்சித்திரியும் தலைவனின் போற்ற ஒழுக்கத்தின் அவலநினைவும் உடையவளேனும், தலைவி, தன்னுடைய இல்லறக்கடமைகளிலே தன் மனத்தை முற்றச் செலுத்தியிருக்கும் மனையறமாண்பினையும் இப்பகுதியாற் காணலாம். அவள் தோழியரோ, 'இத்தகு பண்பினாளின் பிரிவுத்துயரம் தீரும் நாள் வாராதோ?' என்று. அவளைப்பற்றியே நினைத்தவராக, அவள் நலத்தையே விரும்பி வேண்டுகின்றனர். இவ் வேட்டலை, இறையருளை விரும்பி வழிபட்டு வேட்டலாகவே கொள்க.

1. நெற்பல பொலிக!

துறை: புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகன், தோழியோடு சொல்லாடி, "யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு. அவள் சொல்லியது.

[(துறை விளக்கம்) 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தினனாகத் தலைவன் தன்னில்லம் மீண்டான். தலைவியோடும் கூடி இன்புற்றும் ஒழுகிவருகின்றான். அக்காலத்து, அவள் உள்ளம், ’அந்நாட்களிலே தன்னைப்பற்றி இவர்கள் எவ்வாறு நினைத்திருப்பார்கள்?’ என்று அறிகின்றதிலேயும் சற்று வேட்கை கொள்ளுகின்றது. அவன், தலைவியில்லாத இடத்தே, அதுபற்றித் தோழியிடம் உசாவுகின்றான். அவள், அவனுக்குத் தலைவியின் உயர்வைக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]