பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. நெய்தற் பத்து

நெய்தற்கு உரியவான கருப்பொருள்கள் செய்யுள்தோறும் அமைந்து வருதலால், இதனை நெய்தற் பத்து என்றே குறித்தனர்.

'நெய்தல், கொடியும் இலையும் கொண்ட ஒரு நீர்ப் பூவகை. இதன் பூக்கள் நீலநிறம் பெற்றவை. 'மணிக்கலத்தன்ன மாயிதழ் நெய்தல்' (பதிற். 30) எனவும் உரைப்பர். மகளிர்தம் கண்ணுக்கு உவமையாக உரைக்கப்படும் இது, வைகறைப் போதிலே மலர்கின்ற தன்மையுடையது. மாலையிலே கூம்புவது, 'நீலம்' என்பது வேறுவகைப் பூ; இது அதனின் வேறு வகை. இதனைக் கொய்து கொண்டு அலங்கரித்து இன்புறுவது நெய்தல் நிலச் சிறுமியரின் வழக்கம். கடற்கரைக் கழிகளில் இதனை இன்றும் காணலாம்.

181. உறைவு இனிது இவ்வூர்!

துறை: 'களவொழுக்கம் நெடிது செல்லின், இவ்வூர்க் கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கொள்ளத் துணிந்தான்' என்ற தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: 'களவொழுக்கம் அலராகிப் பழியெழும் நிலைக்கு வந்துவிடக் கூடாதே' என்று மிகவும் அஞ்சுகிறாள் தலைவி. அவன் வரைவுக்குத் துணிந்தனன் என்று தோழி வந்து மகிழ்வோடு சொல்லவும், அவள் அதுகேட்டுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

நெய்தல் உண்கண் நேரிறைப் பணைத்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணற் குரவை நிறூஉம்
துறைகெழு கொண்கன் நல்கின்

உறைவினி தம்ம இவ் அழுங்கல் ஊரே!