பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

281


அறிதலால், அலர் எழ நேருமாதலின், இனிக் களவுறவு வாய்த்தற்கில்லை என்றதாம்.

இனி, 'மகவீர் தம் காதலரோடு கலந்தாடும் துறைகெழு கொண்கன்' எனக்கொண்டு, ’அவன் நம்மை வரைந்துகொண்டு தானும் அவ்வாறு ஆடிக் களித்தலை நினையாதவனாக உள்ளனனே’ என மனம் நொந்து கூறியதுமாம். 'பொய்தல் மகளிர்' காமக் குறிப்பு அறியாராயினும், அவரைக் காணும் தலைவன்பால் அஃது எழுதல்கூடும் என்றும், அவன் தலைவியை நாடிவரல் வேண்டும் என்றும் கருதிக் கூறியதும் கொள்க.

182. அருந்திறற் கடவுள் அல்லன்!

துறை : தலைமகள் மெலிவு கண்டு, தெய்வத்தால் ஆயிற்று எனத் தமர் நினைந்துழித் தோழி அறத்தொடு நின்றது.

[து. வி.: களவுக்கூட்டம் இடையீடுபடுதலால் தலைவி மேனி மெலிவுற்றனள். தாயரும் பிறரும் அம்மெலிவு தெய்வத்தால் ஆயிற்றெனக் கருதி, அது தீர்தற்காவன செய்தற்குத் திட்டமிடுகின்றனர். அஃதுணரும் தோழி, குறிப்பாகத் தலைவியின் களவுக்காதலைச் செவிலிக்கு உணர்த்தி, அவனுக்கே அவளை மணமுடிக்க வேண்டுகின்றதாக அமைந்த செய்யுள் இது.]

நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறற் கடவுள் அல்லன்

பெருந்துறைக் கண்டிவள் அணங்கி யோனே.

தெளிவுரை : பெருந்துறையிடத்தே இவளைக் கண்டு வருத்தமுறச் செய்தவன், தடுத்தற்கு அரிதான பெரிய வளமையினைக் கொண்ட கடவுள் அல்லன். நெய்தலின் நறியமலரைச் செருந்தி மலரோடும் கலந்து, கைவண்ணத்தாற் புனையப்பெற்ற நறுந்தாரின் மணம் கமழ்ந்தபடியே இருக்கும், மார்பினையுடையனாகிய ஒரு தலைவன் காண்!

கருத்து: 'அவனோடு மணம் சேர்த்தாலன்றி இவள் மெலிவு தீராது என்றதாம்.

விளக்கம் : அழகுணர்வும் மணவிருப்பும் உடையவனாதலின் தலைவன் நெய்தலின் நீலப்பூவினையும், செருந்தியின் பொன்னிறப் பூவினையும் கலந்து கட்டிய கதம்ப மாலையை மார்பில் விரும்பி