பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

283


தெளிவுரை : பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாக அமைகின்ற மாலைப்பொழுதே! திரட்சிமிக்க அருவிகள் வீழ்கின்ற நீர்வளம் மிகுந்த கானம்பொருந்திய நாடனும், சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்வளம் கொண்ட வயல்களையுடைய நாடனுமான, குளிர்கடல் நிலத்துக்குரியவனாகிய நம் சேர்ப்பனானவன் நம்மைப் பிரிந்துள்ளான் என்பதனாலே, முன்பினுங் காட்டில் கடுமையுடையையாய் உச்சிப்போதினும் வெம்மை காட்டியபடி வருகின்றனையே! வளைந்த கழியிடத்தேயுள்ள நெய்தல்மலர்களும் மாலையிலே இதழ்குவிந்து ஒடுங்கி காலையிலே மலர்வது போலக் கவினுடனே நீயும் வரினும், எம் துயரத்தைக் களைவார்தான் என்னருகே இல்லையே!

கருத்து: 'பொழுதெல்லாம் வருந்தி நலியும் எனக்கு எப்போது மாலையானால் என்ன?' என்றதாம்.

சொற்பொருள் ; கணங்கொள் அருவி - திரட்சி கொண்ட அருவி; திரட்சி வீழ்நீரின் பெருக்கம். கான்கெழு நாடன் - காடுபொருந்திய நாட்டிற்குரியோன்; முல்லைத் தலைவன். குறும்பொறை - உயரம் குறைந்த பொற்றைகள் என்னும் சிறு குன்றுகள்; குறும்பொறை நாடன் - குறிஞ்சித் தலைவன்; நல்வயலூரன் - மருதத்தலைவன்: தண்கடற் சேர்ப்பன் - நெய்தல் தலைவன். ஆகவே, தலைவியின் காதலன் நானிலத்துக்கும் தலைமை கொண்ட அரசகுமாரன் என்பது கூறியதாயிற்று. கடும்பகல் - கடுமையான வெப்பங்கொண்ட பகற்போதான உச்சிவேளை; மாலை கடும்பகலினும் வருதல், மாலையிலே மிகும் பிரிவுத்துயரம் உச்சிப் பகற்போதிலும் மிக்கெழுந்து தோன்றி வருத்துதல். கையறு மாலை - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைநேரம். காலைவரினும் - காலைப்போதினும் துயர்மிகுத்து வருவதாயினும்.

விளக்கம் : பகலும் இரவுமாகிய நாள்முழுதுமே பிரிவுத் துயரத்தாலே தலைவனை நினைந்து நினைந்து வருந்துகின்றாளான தலைவி, மாலைப் போதிலே மட்டுந்தான் துன்புறுவதாக எண்ணித் தன்னைத் தேற்றும் தோழியின் செயல்கண்டு மனம் வெதும்பிக் கூறியதாக இதனைக் கொள்க. நெய்தல் மலர் கூம்புதல் மாலைப்போதில் என்பதனை, 'நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல்சேர் மண்டிலம்' என வரும் நற்றிணையால் - (நற். 187) அறிக. 'பண்டையில் வருதி' நீதான் பண்டு போலவே வருவாயாயினும், அவர் பிரிந்தமையின் யான் துயரத்தே ஆழ்தலையே செய்கின்றனை என்றதாம்.