பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

291


மகன். பிற வாயில்கள் பலரும் வறிதே இசைவுபெறாது திரும்பவே, ஒரு விருந்தினரோடும் கூடியவாைக வீட்டிற்குள் செல்கின்றான். தலைவியும். தன் மனைமாட்சியாலே, தன் உள்ளச்சினத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு, விருந்தினரை விருப்போடும் புன்முறுவலோடும் உபசரிக்கின்றாள். அவளின் அந்தச் சிறப்பை வியந்து, தலைவன் மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்

தகை பெரி துடைய காதலி கண்ணே.

தெளிவுரை : கரிய கழியிடத்தேயுள்ளதான சிவந்த இறால் மீன்களைப் புள்ளினங்கள் பற்றியுண்ணும், கொற்கைக் கோமானது கொற்கை நகரத்தின் அழகிய பெரிய துறையிடத்தே, வைகறைப்போதிலே மலரும் நெய்தலைப்போல, எம் காதலியின் கண்கள், பெரிதான தகைமைகளைக் கொண்டன வாகுமே!

கருத்து: 'அதனைக் கலங்கச் செய்தலை இனிச் செய்யேன்' என்றதாம்.

சொற்பொருள் : இனப்புள் - புள்ளினம்; புட்கள் இனம் இனமாக ஒருங்கே கூடியிருந்து மீன்பற்றி உண்ணும் இயல்பினவாதலின் இவ்வாறு கூறினன். வைகறை - விடியல். தகை - தகுதிப்பாடு.

விளக்கம் : விருந்து வரக்கண்டதும் மகிழ்ந்த முகத்தோடு வரவேற்ற, தன்னைக் குறித்த இனத்தையும் வெறுப்பையும் உள்ளடக்கி இன்முகம் காட்டிய தலைவியின் கண்ணழகினை, கதிர்வர மலரும் நெய்தலோடு உவமித்துப் போற்றுகின்றான். தன்னை வெறுத்தாற்போன்ற குறிப்பு எதுவும் பார்வையிற் கூடக் காட்டாதே, தன்பால் அன்பும் கனிவுமே அவர்முன் காட்டிய அந்தச் செவ்வியை வியப்பான். 'தகைபெரிதுடைய' என்றான். தான் அவட்குத் துயரிழைத்தாலும், அவள் தன் காதன்மையும் கடமையுணர்வும் மாறா தாள் என்பான், 'காதலி' என்றான். அவள் தன்னையும் இனி ஒதுக்காது ஏற்றருள்வாள் என்ற மனநிறைவாலே மகிழ்ந்து கூறுவன இவையெல்லாம் என்க.