பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

ஐங்குறுநூறு தெளிவுரை


அவர் உளத்துயரை அறியுமாறும் செய்தன. ஆகவே, காதல் வாழ்வில் உடனுறை காலத்தே செறிதலும் பிரிந்துறை காலத்தே நெகிழ்தலும் இயல்பாக, இலக்கியங்களினும் இவற்றைக் குறித்து நயம்படப் புலவர்கள் பலவும் காட்டி உரைப்பாராயினர்.

இவ்வாறு, செய்யுள்தோறும் வளையாகிய காதற் கருப்பொருள் சிறந்துவர அமைந்த பத்துச் செய்யுட்களைக் கொண்ட பகுதியாதலால், இதனை 'வளைப்பத்து' என்றனர். வளையொலியே அடையாளம் காட்டி அகத்தே அவளை நினைப்பித்தலும் காதற்றலைவனிடத்தே உளதாம் அக நெகிழ்ச்சியாகும்.

191. நெஞ்சம் கொண்டு ஒளித்தோள்!

துறை : 'நின்னாற் காணப்பட்டவள் எவ்விடத்து, எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது.

[து. வி.: தலைவனின் காதலை முதன்முதலில் ஏற்காது தடுத்துப் பலவுரைத்தும், அவன் அதனையே பிடிவாதமாகப் போற்றி நிற்கப், பாங்கன், அவன் உளங்கொண்டாளைப் பற்றிய விவரங்களை வினாவுகின்றான். அவனுக்குத் தலைவன் அவளைப் பற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

கடற்கோடு செறிந்த வளையார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள் என்

நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே!

தெளிவுரை : கடற்சங்காலாயின செறிந்த வளைகள் விளங்கும் முன்னங் கைகளையும், கழிப்பூக்களால் தொடுக்கப் பெற்ற மாலை விளங்கும் கரிய பலவான கூந்தலையும், கானலிடத்து ஞாழலின் அழகிய தழையாலாயின் தழையுடையினையும் கொண்டவளாகவும், வரையிடத்துச் சூரர மகளிரினுங் காட்டில் அரிய வனப்புடையவளாகவும் விளங்குபவளே, நிறையுடைமையால் கட்டுக்கு உட்படுத்த இயலாதே சிதைந்து தளர்வுற்ற என் நெஞ்சத்தினைக் கைப்பற்றிக் கொண்டு, மறைந்து போயினவள் ஆவாள்!

கருத்து: 'அவளை அடைந்தாலன்றி யான் இனிக் கணமும் உயிர் வாழேன்' என்றதாம்.