பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

301


195. பாயல் வௌவியோள் !

துறை: வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது.

[து. வி. வரைவு இடைவைத்துத் தலைவியைப் பிரிந்து போய் வேற்று நாட்டிடைத் தனியாக வாழ்கின்றான் தலைவன். தனிமைத் துயரத்தைத் தாங்காதவனாக, அவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்
கெடலருந் துயரம் நல்கிப்

படலின் பாயல் வௌவி யோளே.

தெளிவுரை: சங்கிடத்தே பிறக்கும் முத்துக்களைப் பிற புலத்தாருக்கு விலைகூறி விற்கும் தொழிலோரான பரதவர்கள் வாழும், கடல் வளம் பொருந்திய கொண்கனின் அன்புமிக்க மடமகள், எனக்கு நீங்குதற்கரிய துயரத்தினைத் தந்து, கண்படுதலாகிய இனிய பாயலின்பத்தையும் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டாளே!

கருத்து: "அவளை உரிய பொருளோடு சென்று வரைந்து விரைவில் மணந்து கொள்ளல் வேண்டும்" என்றதாம்.

சொற்பொருள்: வளைபடு முத்தம்-வளையிடத்தே பிறக்கும் முத்தம். பகரும் - விலைகூறி விற்கும். கெடலரும் துயரம் - நீங்குதற்கரிதான துன்பம். படல் - கண்படல். பாயல் - தூக்கம். பாயல் வெளவுதல் - உறக்கத்தை வாராதே செய்தல்.

விளக்கம்: 'பகர்தல்' ஏனைய பொருள்களைப் பெறக்கருதி; ஆகவே, ஏனை நிலத்தாரிடம் சென்று விலைகூறல் என்று கொள்க. மற்றையார் மிக விரும்பும் வளைபடு முத்தினை அவர் தாம் தமக்கெனப் பேணிவைக்க நினையாதே விலைபகர்தல், அது அவர்க்கு என்றும் கிடைக்கும் மலிவான பொருளாகவும், பிறர் அவர்மூலமே பெறக்கூடிய அரும்பொருளாகவும் இருப்பதால். பொருள்மேல் மனம் செல்லப் பிரிந்து போயினபோதும், தொடர்ந்து அங்கும் சென்று வருத்தும் தன்மைத்து அவள் காதல் நினைவு என்றதாம். 'கெடலரும் துயரம்' என்று அவன் அத் துயராலே நெடிது மனம் வாடிக் கூறுகின்றான்.