பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

ஐங்குறுநூறு தெளிவுரை


உள்ளுறை: 'வளைபடு முத்தம் பரதவர் பகரும் கடல் கெழு கொண்கன் காதன் மடமகள்' என்றது, அவன் விரும்பிய வரைபொருளைத் தந்தால், அவனும் அவளை எனக்கு மணஞ் செய்து தந்துவிடுவான்; அஃது உடனே இயலாமையிலே யானும் இவ்வாறு பொருள்தேடித் தனித்துவந்து வாடி வருந்துகின்றேன் என்று நினைந்து, உளம் வருந்தியதாகவும் கொள்க.

வளைபடு முத்தமாகிய பெறற்கரிய ஒன்றையே விலைபகரும் பரதவர் ஆதலின், அவர் மகட்கும், அவர் விரும்பும் முலைவிலையான வரைபொருளைப் பெறுவதிலேயே நாட்டம் உடையவர் என்றதுமாம்.

மேற்கோள் : வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்தியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல், அகத். 45).

196. வரைந்தனை கொண்மோ!

துறை: குறை மறுக்கப்பட்ட தலைமகன், பின்னும் குறை வேண்டியவழித் தோழி சொல்லியது.

[து. வி.: தன் குறை கூறித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்ட, அவள் அவன் களவுறவுக்குத் தான் உதவ இயலாதென மறுத்து விடுகின்றான். மீண்டும் அவன் அவளிடம் வந்து குறைதீர்க்க வேண்டும்போது, 'இவளை வரைந்துவந்து மணந்து இன்புறுவாயாக' என்று, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்

தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ!


தெளிவுரை: சங்கை அறுத்துச்செய்த ஒளியுடைய வளையினையும், கொழுவிய பலவான கூந்தலையும், பொருத்தம் ஆய்ந்து அணிந்த தோளின் தொடியினையும் உடைய மடவரலான இவளை அடைதற்கு விரும்புகின்றனை யானால், தெளிந்த நீருள்ள கழியிடத்தே சிறந்த இறா மீன்கள் அகப்படும் குளிர்ந்த கடல்நிலச் சேர்ப்பனே! இவளை வரைவொடு வந்தனையாகி மணங்கொள்ளுதனை உடனே செய்வாயாக!