பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : ஒளி விளங்குகின்ற வளைகள் ஒலிக்குமாறு அலவனை அலைத்து விளையாடியபடியும், முகத்தை மறைக்கும் கூந்தலுடையாளாகத் தலைகுனிந்தும் இவள் நின்றனள். தனிமை கொள்ளும் மாலைப்பொழுது மறைதலும், நன்மை பொருந்திய தன் மார்பினையும் இவள் எனக்குத் தருவாள்!

கருத்து: 'இவள் இன்று எனக்கு நலன் தருவாள்' என்றதாம்.

சொற்பொருள்: தெளிர்ப்ப - ஒலிக்க. அலவன் - நண்டு. அலைத்து - ஆட்டி விளையாடி. முகம் புதை - முகத்தை மூடி மறைக்கும். கதுப்பு - கூந்தல். புலம்பு - தனிமைத்துயரம். நலம் கேழாகம் - நன்மை பொருந்திய மார்பகம்; தழுவுவார்க்கும் தழுவத்தருவார்க்கும் நலம் தருவது என்க.

விளக்கம் : தலைவனோடு கூடிக் களவுறவிலே களித்தற்கே வந்தாளேனும், இயல்பான பெண்மைப் பண்பின் செறிவு அவளார்வத்தைத் தடை செய்வதால், காதற்குறிப்பை உணரக் காட்டியபடியும், ஏதுமறியாப் பேதைச் சிறுமிபோல அலவனாட்டி விளையாடியவாறும், தலைவனை எதிர்ப்படு காலையில் கூந்தலால் தன் முகம் மறையத் தலைகுனிந்தும் நின்றனள் என்பது, அவளின் மடம் நிரம்பிய மென்மைச் செவ்வியை உணர்த்தும் இலக்கிய நல் ஓவியமாகும். புவம்புகொள் மாலையிலே, அவளும் அவனுறவை விரும்பி வேட்பினும், அயலாரும் ஆயமகளிரும் கண்டு அலரெழல் நேருமென அஞ்சினளாதலால், மாலை மறைந்து இருள் படரும் போதில், அவள் தன்னை அணைத்திட இசைவாள் என்று தலைவன் கூறுவது, அவளுள்ளம் உணர்ந்துகாட்டும் நயமிக்க தாகும். 'நலங்கேழ் ஆகம்’ என்றது, முன்பே தான் தழுவி நலம்பெற்ற செவ்வியும், அது பெறுதல் நினைவாகவே துடித்திருக்கும் மனத்துன்பமும் தோன்றக் கூறியதுமாகும். இவற்றால், ஆயத்தாரின் ஆடல்களோடு தானும் கூடிக் கலவாமல் தனித்தொதுங்கி நின்ற தலைவி நிலையும் விளங்கும். நெய்தற்கண் புணர்ச்சிபற்றிக் கூறியதனால், இதனைத் 'திணை மயக்கம்' என்று கொள்ளல் வேண்டும்.

வளை தெளிர்ப்ப அலவனாட்டியது தான் வந்தது உணர்த்தியது; முகம் புதைத்தனளாக இறைஞ்சி நின்றது நாணித்தலை கவிழ்ந்தது.