பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

307


யிடத்தே சென்று குறை கூறுதல்" என்று நச்சினார்க்கினியரும் இதனைக் களவுக்காலக் கூற்றாகவே கொள்வர்- (தொல், களவு, 23.)

"பாங்கி இறையோற் கண்டமை கூறல்" என நம்பியகப் பொருள் உரையும் களவுக்கூற்றாகவே கொள்ளும்.

குறிப்பு : களவுக் கூற்றாகக் கொள்ளுதலே நயம் மிக்கதும் ஆகும். தன் களவுறவை மறைத்தொழுகிய தலைவியிடம், தான் அஃகறிந்தமை புலப்படக் கூறும் தோழி கூற்றாகவும், அல்லது தலைவன் குறையிரந்து நின்றதற்கிரங்கித் தலைவி பாற்சென்று தோழி அவளை வேண்டும் கூற்றாகவும் பொருள் கொண்டு மகிழ்க.

199. மணல் ஏறிக் காண்போம்!

துறை : தலைமகன் ஒருவழித் தணந்துழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.

[து. வி. தலைவன் சிறிது நாளாகத் தன்னைக் காணுதற்கு வராமையினாலே, அவன் நினைவே மிகுதியாகக் கலங்கி வாடியிருக்கின்றாள் தலைவி. அவளுக்கு ஆறுதல் கூறுகின்ற தோழி உரைப்பதாக அமைந்த செயுய்ள் இது.]

கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி, யானாது
காண்கம் வம்மோ தோழி!

செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே!

தெளிவுரை : தோழி! செறிவாகக் கையிடத்தே அமைந்து விளங்கிய நம் வளைகளை, நெகிழ்ந்து கழன்றோடச் செய்தானாகிய அத் தலைமகனது அலையெறியும் கடல்நாட்டினை, கானற் பெருந்துறைக்கண்ணே, அலைகள் முழக்கத்தோடே எழுந்து வந்து அலைக்கின்றதும், வானுற உயர்ந்து கிடப்பதுமான நெடிய மணல்மேட்டின் மேலாக ஏறிநின்று நாமும் காணலாம் வருவாயாக!

கருத்து: 'அவன் நாட்டையாவது கண்டு நின் மனம் சிறிது தேறலாம்' என்றதாம்.