பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

ஐங்குறுநூறு தெளிவுரை


சொற்பொருள்: கலிதிரை திளைக்கும் - ஆர்ப்பரித்து வரும் அலைகள் மோதி அலைக்கும். வானுயர் - வானமளாவ உயர்ந்த. எறிகடல் - அலையெறியும் கடல்; எறிதல் கரையிலே வந்து வந்து மோதிப் போதல்.

விளக்கம் : 'அவன் நாடு காண்போம்' என்றது, 'அவன் இன்றேனும் வருகின்றானா என்று பார்ப்போம்' என்பதைக் கருதிக் கூறியதாம். 'எறிகடல் நாடு' என்றது. 'அவ்வாறே அவனும் நம்முளத்தே எழுந்துமோதித் துயர்விளைப்பானாயினன் என்பதை நினைத்துக் கூறியதாம். 'வானுயர் நெடுமணல் ஏறிக் காண்போம் என்றது, நன்றாகக் காணும் பொருட்டு. 'வளை நெகிழ்த்தோன்' என்றது, 'அவன் அருளற்றவனாயினான்' என நொந்ததாம். 'குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ' என வரும் நற்றிணைத் தொடரும் - (நற். 235), இவ்வாறு மகளிர் தலைவன் நாட்டைக் காண விரும்புதலைக் கூறும்.

'அவன் செயலாலே துயருறும் நம்போலவே, கலிதிரை திளைத்தலாலே வருந்தும் நெடுமணலில் ஏறிக் காண்போம்.' என்றது, துயர்ப்படும் அது நம்மீது இரங்கி, நமக்கு உதவி செய்யும் என்னும் உட்குறிப்பையும் கொண்டதாகும்.

மேற்கோள்: 'தலைவியை ஆற்றுவித்தது' இது எனக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல், களவு. 24.)

200. நலங்கவர் பசலையை நகுவேம்!

துறை: உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின் கண் தலைமகன் வந்ததறிந்த தோழி, தலைமகளைப் பாயலுணர்த்திச் சொல்லியது.

[து. வி.: தான் பிறந்த வளர்ந்த வீட்டையகன்று, தலைவனோடு உடன்போக்கிலே செல்வதற்குத் துணிந்து விடுகின்றாள் தலைவி. இரவின் கடையாமத்தே, தலைவனும் அவள் இல்லின் ஒருபுறமாக வந்து மறைந்திருக்கின்றான். அவன் வரவறிந்த தோழி. தலைமகளைத் துயிலெழுப்பிச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

இலங்குவீங் கெல்வளை ஆய்நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி

நலங்கவர் பசலையை நகுகம் நாமே!