பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

309


தெளிவுரை : விளக்கமோடே கூடியவாய்ச் செறிவுற்றிருக்கின்ற ஒளிவளைகளை உடையவளே! நின் நுணுக்கமான நெற்றியானது அழகினை எய்தும்படியாக, பொன் தேரினையுடைய கொண்கனும், நிள்னை உடன்கொண்டு போதற்பொருட்டாக, இப்போதில் நம் இல்லின்புறத்தே வந்துள்ளனன். விளங்குதலான செவ்வரிபொருந்திய நின் நீள்விழிகளை நீயும் திறப்பாயாக. நம் நலத்தைக் கவரும் பசலையை, அதுதான் இனிக் கெடுதலை நோக்கி, நாமும் நகையாடி மகிழலாம்!

கருத்து: 'இனி நம்மை வாட்டும் பசலை நம்மைவிட்டு அகலும்' என்றதாம்; 'துணிவோடு விரைந்து புறப்பட்டு எழுவாயாக' எனத் தூண்டியதுமாம்.

சொற்பொருள்: வீங்கு - செறிவாகப் பொருந்தியிருக்கும். 'எல்வளை' என்றது தலைவியை விளித்ததும் ஆம். ஆய் நுதல் - நுணுக்கமான அழகெல்லாம் பொருந்திய ஒளி நுதல்; என்றது, பண்டை அழகினைச் சுட்டி நினைப்பித்தது. பொலந்தேர் - பொன்மை நிறம் விளங்கும் தேர். இனியே - இவ்வேளையிலேயே. விலங்கரி - குறுக்காகப் படர்ந்திருக்கும் செவ்வரி. ஞெகிழ்மதி - மூடியுள்ள இமைகளை நெகிழ்வித்துக் கண்களைத் திறப்பாயாக; துயில் நீத்து எழுவாயாக. நலம் கவர் - அழகைக் கவரும். நகுகம் - நகையாடுவோம்.

விளக்கம் : வரைவு நீட்டித்தலாலும், இற்செறிப்பின் கடுமையாலும், தலைவனைக் காணவியலாதே நுதல் பசப்புற்று வாடி நலனழிந்திருந்தாள் தலைவியாதலின், அஃது பிரிவில்லாத மணவுறவுக் கூட்டத்தாலன்றித் தீராதென்பதாம். அது வாய்க்க உடன்போக்கு நினைந்தாள் ஆதலின், 'ஆய்நுதல் கவின, பசலையை நகுகம்' என்றனள். 'பொலந்தேர்க் கொண்கன்' என்றது, தமர் தடுக்க வியலாதபடி விரையச் செல்லும் தேருடனே வந்துள்ளான் என்றதாம். 'அவன் வந்தான்; நீயும் காலந் தாழ்த்தாயாய் உடனே புறப்படுக' என்பாள், 'இனியே நெடுங்கண் ஞெகிழ்மதி' என்கின்றனள். அதுகாறும் உறக்கம் பற்றாதிருந்தவள், 'உடன்போக்கிற்குத் தலைவன் இசைந்தான்' என்றதும் களிப்போடு நிம்மதியாகத் துயின்றனள் என்பதும், அவளைப் பிறர் காணாவகை அனுப்பவேண்டுமே என்னும் கவலை மிகுதியால் தோழி துயிலற்றிருந்தனள் என்பதும் விளங்கும். உடன்போக்கு பின்சாமத்து இரவுப்போதிலேயே பெரிதும் நிகழக்கூடும் என்பதும் இதனால் அறியப்படும்.

'பசலையை நகுகம்' என்றது. 'பசலையால் ஐயுற்று, அலருரை சொல்லித் திரிந்தாரை எள்ளி நகுவோம்' என்றதாக்