பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

31


தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பசுக்களிடத்திலே பாற்பயன் மிகுதியாகச் சுரப்பதாக: பகடுகள் பலவாகப் பெருகுக' என வேண்டினள் தலைமகள். யாமோ, 'வயல்களிலே விதைவிதைத்துத் திரும்பும் உழவர்கள், அவ்வட்டியிலே நெல்லைக் கொண்டவராகத் தம் வீடுநோக்கிச் செல்லும், பூக்கள் நிரம்பிய ஊரனான, தலைவனின் மனையற வாழ்க்கை என்றும் சிறப்பதாக' என வேண்டினேம்.

கருத்து: தலைவியோ இல்லறக் கடனாற்றுவதில் முட்டுப்பாடற்ற வளமை மிகுதியையே வேண்டினாள்; யாங்களோ நுங்கள் மனைவாழ்க்கை சிறப்படைவதையே விரும்பி வேண்டினேம்.

சொற்பொருள்: ஊறுக - சுரக்க, பகடு. - எருமை, வித்திய - விதைத்த, கஞல் - மிகுதியாகவுடைய மனைவாழ்க்கை - மனையாளோடு கூடிவாழும் இன்ப இல்லற வாழ்க்கை.

விளக்கம் : குடும்ப நல்வாழ்வுக்குப் பாற்பயன் மிகுதியும், வயல்வளம் செழித்தற்குப் பகடுகளின் பெருக்கமும் தலைவி வேண்டினாள், அவளது இல்லறக்கடனைச் செழுமையாக நிகழ்த்தலின் பொருட்டு என்க. ’வித்திய உழவர் நெல்லொடு பெயரும்’ என்றது, முன் வித்தி விளைந்ததன் பயனைக் கைக்கொண்டு மீள்வர் என்பதாம். இஃது பயிர்த்தொழில் இடையறாது தொடரும் நீர்வளமிக்க ஊரன் என்பதற்காம். ’பூக்கஞல் ஊரன்' என்றது மணமலர் மிகுந்த ஊர் என்றற்காம்.

உள்ளுறை: தானடைவதற்கு விரும்பிய பரத்தைக்கு வேண்டுவன தந்து. அவளோடு துய்ப்பதற்கான காலச்செவ்வியை எதிர்நோக்கும் தலைவன், முன்னர் அவ்வாறு தந்து கூடுதற்கு முயன்ற மற்றொருத்தி, அப்போதிலே இசைவாகி வர. அவளோடுஞ் சென்று கூடி இன்புறுவானாயினான் என்பதைக் குறிப்பாகச் சுட்டி உணர்த்த, 'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்’ என்று கூறினளுமாம்.

2. ’பூக்கஞல் ஊரன்' என்றது, மலர்கள் மிகுதியாகி மணம்பரப்பி மகிழ்வூட்டுதலே போன்று, பரத்தையரும் பலராயிருந்து, நாள்நாளும் இன்பமூட்ட, அதிலேயே மகிழ்பவன் தலைவன் என்பதை உணர்த்துவதாம்.

3. 'பால் பல ஊறுக' என்றது, தலைவி மகப் பெற்ற தாயாகி மான்படைந்தவள் என்னும் சிறப்பைக் குறிப்பாகச் சுட்டும்.