பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

33


உரிமையாகியும், எவருக்கும் தனியுரிமையற்றும் இருக்கும் நிலம்.

விளக்கம் : நாடு பகையற்றிருப்பதனையும். மாந்தர் அவரவர் கொண்ட கடன்களைச் சரிவரச் செய்துவருதலையும் வேண்டினாள். அவ்வாறே தன் இல்லறக்கடன்களையும் தான் செவ்விதே செய்தற்கு விரும்பும் விருப்பினள் என்பதனால். 'பழன மாகற்க நின் மார்பு' என்று தோழியர் வேண்டியது. அத்தகு கற்பினாளுக்கே உரிமையுடைய இன்பத்தை, உரிமையில்லார் பலரும் விரும்பியவாறு அடைந்து களிக்கும் நிலை தொடராதிருக்க வேண்டியதாம். 'பார்ப்பார் ஓதுக' என்றது, அதனால் நாட்டிலே நன்மை நிலைக்கும் என்னும் அவரது நம்பிக்கையினை மேற்கொண்டு கூறியதாம்.

உள்ளுறை: பூத்துப் பயன்படாது ஒழியும் கரும்பையும் காய்த்துப் பயன்தரும் நெல்லையும் ஒருசேரச் சுட்டிக்கூறியது. அவ்வாறே பயனுடைய அறத்தினைத் தெரிந்து பேணாதானாகிக் குடிநலன் காக்கும் தலைவியையும், பொருளே கருதும் பரத்தையரையும் ஒப்பக்கருதி இன்பம்காணும் போக்கினன் தலைவன் என்று சுட்டி, அவன் பிழைகாட்டுதறகாம்.

பரத்தையர் தம் குடிமரபு தழைக்கப் புதல்வர்ப் பெற்று உதவுகின்ற தகுதியற்ற நிலையை, 'அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றிசான்ற கற்பொடு எம்பாடாதல் அதனினும் அரிதே' எனும் நற்றிணையால் உணர்க (நற். 830).

5. பிணி சேண் நீங்குக !

துறை : இதுவும் மேற்குறித்த துறை சார்ந்ததே.

'வாழி ஆதன்; வாழி அவினி!
பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக'!
என வேட்டோளே யாயே; யாமே
'முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேர் எம்

முன்கடை நிற்க' என வேட்டேமே!

ஐங். -- 3