பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நாடு பசியில்லாதாகுக; பிணிகள் நெருங்காதே நெடுந்தொலைவு நீங்கிப் போவனவாகுக' என விரும்பிவேண்டினள் தலைமகள். யாமோ, 'முதலையின் இளம்போத்தும் முதிர்ந்த மீனைப்பற்றி உண்கின்ற, குளிர்ந்த நீர்த்துறை அமைந்த ஊருக்கு உரியவனான தலைவனின் தேரானது, எம் வீட்டின் தலைவாயிலிலேயே எப்போதும் நீங்காதே நிற்பதாகுக' என வேண்டினோம். . கருத்து: தலைமகள் நாடெல்லாம் நன்கு செழித்து வாழ்தலையே வேண்டினள்; யாமோ, அவள் தலைவனோடு என்றும் கூடியின்புற்றுக் களிப்புடன் வாழ்தலையே விரும்பி வேண்டினேம்.

சொற்பொருள் : சேண் - நெடுந்தொலைவு. போத்து - இளம்பருவத்துள்ளது. முழுமீன் - முற்ற வளர்ந்த மீன். ஆர்தல் - நிறையத்தின்றல். முன்கடை - தலைவாயில்; "முன்" 'கடை' என இரண்டையும் இணைத்துச் சொன்னது, வீட்டின் பின்பகுதியிலேயே பெரிதும் இருந்து வருவாரான மகளிர்க்கு, முன்வாயிலே கடைவாயிலாகத் தோன்றும் என்பதுபற்றி என்க; இது பெண்டிர்தம் பேச்சுமரபு.

விளக்கம்: 'உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியல்வதே (குறள் 734)' சிறந்த நாடாதலின், அத்தகைய நாட்டிடத்தேயே இல்லற நல்வாழ்வும் நிலையாகச் சிறக்குமாதலின், அறக்கடைமையே நினைவாளாயினாள். அதனையே வேண்டினள் என்க. தோழியரோ, அவனும் அவளுடனிருந்து அவளை இன்புறுத்தித் துணைநிற்றலையே நினைவாராக. ’அவன் தேர் எப்போதும் தம் வீட்டுத் தலைவாயிலிலேயே நிற்பதாகுக’ வேண்டுவாராயினர். தலைவன் தேர் முன்கடை நீங்காதே நிற்பதாயின், அவனும் இல்லிலேயே தலைவியுடன் பிரியாதிருப்பவன் ஆவான் என்பதாம்.

உள்ளுறை : முதலைப் போத்தானது, தன் பசிதீர்தலொன்றே கருத்தாக முழுமீன்களையும் பற்றியுண்டு திரிதலே போலத், தலைமகனும் தன்னிச்சை நிறைவேறலே பெரிதாகப் பரத்தையரைத் துய்த்துத் திரிவானாயினன் என்பதாம். இதனால் துயருறும் தலைமகள், மற்றும் இல்லத்துப் பெரியோர் பற்றிய நினைவையே அவன் இழந்துவிட்டனவ என்பதும் ஆம்.

குறிப்பு : ஒன்று முதலாக ஐந்து முடியவுள்ள இச்செய்யுட்கள் எல்லாம் கற்பின்கண் நிகழ்ந்தவை காட்டுவன;