பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

37


குறிப்பு : 'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன்' என்றது, மலர்ந்து மணம்பரப்பும் மலர்களையுடைய தாமரைப் பொய்கையிடத்துத் தானே முகைகளும் முகிழ்த்துத் தோன்றுமாறுபோல, கற்பறம் பேணி வாழும் மகளிரிடையே, தலைவியும் மணம்பெறாத முகைபோல மணமற்றுத் தோன்றுகின்றனள் என்று உள்ளுறை பொருள் கூறலும் கூடும். முகை விரிந்து மணம் பரப்பலேபோலத் தலைவியும் மணம் பெற்றுக் கற்பறத்தால் சிறப்பெய்த வேண்டும் என்பதாம்.

7. அறம் நனி சிறக்க !

துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே யாம்.

'வாழி ஆதன்; வாழி அவினி!
அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!"
என வேட் டோளே, யாயே; யாமே,
'உளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்கும்
தண்துறை யூரன் தன்னூர்க்

கொண்டனன் செல்க' என வேட்டேமே!

தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க' அறவினைகள் மிகுதிபாக ஓங்குக; அறம் அல்லனவாகிய தீச்செயல்கள் இல்லாதேயாகி முற்றவும் கெடுவதாக' எனத் தலைமகள் விரும்பி வேண்டி இருந்தனள். யாமோ, உளைபொருந்திய பூககளைக்கொண்ட மருதமரத்தினிடத்தே, குருகுகள் தன் நீர்த்துறையுள்ள இனத்தோடே அமர்ந்திருக்கும் குளிர்ந்த தன்னூர்க்குத் தன் ஊருக்குரியவனான தலைவன், இவளைத் மனையாளாக்கிக் கொண்டு செல்வானாகுக' என விரும்பி வேண்டியிருந்தோம்.

கருத்து: தலைமகளோ, நாடெல்லாம் நன்மையாற் செறிவுற்று வாழ்தலையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவள் நின்னை மணந்து மனையறம் பேணிக் கொள்ளலையே விரும்பி வேண்டியிருந்தோம்.

சொற்பொருள்: அல்லது - அறம் அல்லாததது; தீவினை. உளைப்பூ - உளை கொண்டதான பூ; உளை - உட்டுளை. குருகு - நீர்வாழ் பறவை; நெய்தற்கு உரிய இதனை மருதத்துக் கூறினர்,