பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

40


என வரும், 'நின்னைத் துறந்து வாழேன்' என்றாற்போல்வதான உறுதிமொழி இது.

விளக்கம் : மன்னன் முறை செய்யானெனின் நாடு கெடும்; களவும் பிற தீவினைகளும் மலியும், ஆதலின், தலைமகள் அரசு முறைசெய்தலையும், களவு இலையாதலையும் வேண்டினள். 'சூள் வாய்ப்பின் அவள் இன்புறுவள்' ஆதலின், யாம் அதனை வேட்டனம் என்கின்றாள்.

உள்ளுறை: அலங்கு சினை மாஅத்து அணிமயில் இருக்குமாறு போல, நின் வளமனையிலே தலைவியாகத் தலை மகள் அமைந்து, நின் குடிக்கு அழகு செய்வாளாக என்பதாம்.

குறிப்பு: சூள் பொய்த்தானைத் தெய்வம் வருத்தும்; சூள் பொய்ப்படின் தலைவியும் உயிர் கெடுவள்: ஆதலின், அவன் சூள் பொய்யாதானாகியும், அவள் மணம்பெற்று ஒன்றுகூடியும் இன்புறுக என்று வேண்டியதுமாம்.

9. நன்று பெரிது சிறக்க!

துறை : இதுவும் முற்செய்யுளின் துறையே அமைந்தது.


'வாழி ஆதன்; வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'
என வேட் டோளே, யாயே; யாமே,
‘கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை

அம்பல் ஆகற்க' என வேட் டேமே!

தெளிவுரை : 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நன்மைகள் பெரிதாகப் பெருகுவதாக; தீவினைகள் யாதும் இல்லாமற் போக' என விரும்பி வேண்டினாள், தலைமகள். 'கயல் மீன்களை உண்ட நாரையானது, நெற்போரிலே சென்று தங்கும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊருக்குரியவனின் உறவானது, பிறர் பழிக்கும் 'அம்பல்' ஆகாதிருப்பதாக' என யாம் வேண்டினேம்.

கருத்து: 'தலைவன் வரைந்துவந்து மணந்துகொள்ளும் வரையும், இவள் உறவு அம்பலாகாது இருப்பதாக' என்பதாம்; ஆகவே, அவன் விரைவில் வரைந்து வந்து மணங்கொள்க என்பதுமாம்.