பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

ஐங்குறுநூறு தெளிவுரை


சொற்பொருள்: நன்று - நன்மைச் செயல்கள். கயல் - கயல் மீன். போர்வு - நெற்போர்; வைக்கோற்போர் என்பர் சிலர்; பெரும்பாலும் வயலிடங்களில் நெற்போரே நிலவும் என்று அறிக. சேக்கும் - தங்கும். அம்பல் - சொல் நிகழாதே முணுமுணுத்து நிகழும் பழிப்பேச்சு (நக்கீரர் - இறையனார் களவியலுரை).

விளக்கம் : நன்மை மிகுகியாக நாட்டிலே பெருகுதலையும், தீமை அறவே இல்லாது ஒழிதலையும் வேண்டுகினறாள் தலைமகள், அந்நிலையே அவள் அறவாழ்வுக்கு ஆக்கமாதலின்.

உள்ளுறை : தலைவியின் நலனுண்டவனாகிய தலைமகன், அவளை முறையை மணந்து வாழ்தலைப்பற்றி எண்ணாதே. தன் மனையகத்தே வாளாவிருந்தனன் என்பதனை, ’கயலார் நாரை போர்விற் சேக்கும்' என்றதால் உணரவைத்தனள்.

நெற்போரிடைத் தங்கினும், கயலார் நாரை புலால் நாற்றத்தை வெளிப்படுத்துமாறுபோல, அவன் தன் வீட்டிலேயே தன் களவுறவை மறைத்து ஒழுகினும், அது புறத்தார்க்குப் புலப்பட்டு அம்பலாதலை அவனாலும் மறைக்க வியலாது; ஆதலின், விரைவில் வந்து மணங்கொள்வானாக என வேண்டினேம் என்பதும் ஆம்.

10. மாரி வாய்க்க !

துறை : இதுவும் முற்செய்யுளின் துறையே.


’வாழி ஆதன்; வாழி அவினி!
மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'
என வேட் டோளே, யாயே; யாமே.
'பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னொடு

கொண்டனன் செல்க' என வேட்டேமே.

தெளிவுரை : 'ஆதன் வாழ்க; அவினி, வாழ்க! மாரி இடையறவினறிக் காலத்தே தப்பாமல் வாய்ப்பதாக; அதனால் வளமையும் மிகுதியாகப் பெருகுவதாக!' என வேண்டினள் தலைமகள். யாமோ, பூத்த மாமரத்தினையும், புலால் நாறும் 'சிறுமீன்களையும் கொண்ட தண்ணிய நீர்த்துறைக்கு உரியவனான தலைமகன், தலைவியை மணந்து, தனனோடும்