பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. வேழப் பத்து

'வேழப் பத்து' என்னும் இப்பகுதியின் பத்துச் செய்யுட்கனிலும், 'வேழம்" என்னும் சொல் தவறாமல் வருகின்றது. இதனை 'வேழக் கரும்பு', 'கொறுக்கைச்சி', 'கொறுக்காந்தட்டை' என்றெல்லாம் வழங்குவர். இதன் தண்டு உள்ளே துளையுடையது. இதன் பூக்கள் வெண்மையாகக் கரும்பின் பூப்போலத் தோன்றும். மூங்கிற் சிமிழ்போலவே, இதன்தண்டையும் முறையாக நறுக்கி அஞ்சனம் பெய்து வைப்பதும் சிறுமியர் வழக்கம் ஆகும். இதன் தண்டுகள் கனமற்றவையாதலின், அவற்றை வெட்டி ஒன்றாக இணைத்துக் கட்டி, மிதவையாக நீரிவிட்டு அதனைப்பற்றிப் புணையாகக் கொண்டும் நீராடுவர். மருதநிலத்தே, நீர் வளம் மிகுந்திருக்கும் ஆற்றோரம் குளத்தோரங்களில் இது மிகுதியாக வளர்ந்து அடர்ந்து காணப்படும். ஆற்றுக் கரையோரம் நீரரிப்பு ஏற்படாதிருக்க, இதனை மக்களே இட்டு வளரச் செய்வதும் உண்டு.

11. நல்லனும் அல்லனும்!

துறை : பாணன் முதலாயினார்க்குத் தலைமகனது கொடுமை கூறி வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு. வாயில் நேர்வாள் கூறியது. (1); 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னாற் பலப்படுதல் தகாது. என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (2) . [து. வி: .(1) முதற்கண் தலைவன் பொருட்டாகத் தூதுவந்தாரான பாணன் முதலாயினார்க்குத் தான் மறுப்புரை செய்து போக்கினாள் தலைமகள்; ஆனால், பின் வந்து வாயில் வேண்டிக் கூறிய பாங்கனுக்குத் தன் இசைவினைப் புலப்படுத்துகின்றாள்; அவள் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள். (2) 'தலைவன் ஒழுக்கம் தவறுதலுடையனாபினும், அது நின்னாலே வெளிப்படல் தகாது' என்று சொன்னாள் பாங்கி; அவளுக்குத் தலைமகள் தன்னிலைமை தோன்றச் சொல்லியதாகவும் இது அமையும்.]