பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

49


அவனது போக்கினைக் குறிப்பால் உணர்ந்த தலைமகள். தோழியிடம் இப்படிக் கூறுகின்றனள்.]

மணலாடு மலிர்நிறை விரும்பிய, ஒண்தழை,
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும், ஊரன்அல் லன்னே.

தெளிவுரை : மணலை அலைத்துச் சொல்லும் நீர்ப் பெருக்கினிடத்தே, விரும்பிய ஒள்ளிய தழையுடைகளை உடுத்தவராகப் புனலாட்டு அயர்வர் மகளிர். அவ்வாறு அயரும் மகளிர்க்குப் புணர்துணையாக அமைந்து உதவுகின்றவன் வேழம் நிறைந்த மூதூரனாகிய ஊரன். அவன் நம்மோடிருப்பதனாலே நம்மூரினிடத்தேயே உள்ளவன் என்றாலும், புறம்போன நெஞ்சத்தால், அவன் நம் ஊரன் அல்லன்காண்!

கருத்து : அவன் மனம் மாறினானேபோலக் காட்டினும், முற்றவும் தன் பரத்தமையைக் கைவிட்டுத் திருந்தினவன் அல்லன்.

சொற்பொருள் : மணலாடு - மணலை அலைத்தல்; வெள்ளம் மிகும்போது அதன் வேகத்தால் மணல் அரிக்கப்பட்டுப் போவது இது 'ஆட்டு' என்பது 'ஆடு' என்று வந்தது. மலிர் நிறை - நிறைந்து பெருகிச் செல்லும் நீர்; 'மலர்நிறை' பாடமாயின், மலர்களை வாரிக் கொண்டுவரும் புதுவெள்ளம் என்க. ஒண்தழை - ஒள்ளிய தழையாடை; ஒண்மையான தளிர்களையும் மலர்களையும் கொய்து ஆடையாக்குவது இயல்பு; 'வெண்தழை' என்பதும் பாடம். துணை - துணையாகும் பொருள். வேழம் - வேழத்தண்டால் அமைந்த புணை; இது நீர்விளையாட்டுக்கு ஏற்ற மிதவையாக உதவுவது; வேழ வெண்புணை தழீ என அகத்தும் வரும் (அகம், 6). அல்லன்-அல்லாதவன்; ஊரிடத்தானாயினும் மனம் ஒன்றிக் கலவாமையால், அருகே இருந்தும் இல்லானாயினன் எனபதம்.

விளக்கம் : 'புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன்' என்பதற்கு, புனலாட்டயரும் மகளிர்க்குத் துணையாக அவரோடுசேர்ந்து தானும் நீராடி அமைந்து உதவும் வேழமிகுதியுடைய ஊரன்' என்பதும் பொருந்தும். 'மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துணை ஆயினள் எமக்கே' (ஐங், 72) எனத் தலைவன் கூற்றாக வருவதும்,

ஐங். - 4