பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : 'புதரின் மேலாகச் சென்று அசைந்தாடும் வேழத்தின் வெண்பூவானது, விசும்பிடத்தே பறந்துசெல்லும் வெண்குருகே போலத் தோன்றும் ஊருக்குரியவன் தலைவன்: அவன், இதுகாறும் செய்த கொடுமைகட்கும் மேலாக, இப்போதும், புதியரான பரத்தையரையே வதுவைசெய்தற்கு விரும்புகின்றவனாக உள்ளனன். ஆதலினாலே, என் மடமை நிரம்பிய நெஞ்சமானது அறவே நம்பிக்கையிழந்து, மிகமிக வறுமையாகின்றது!

கருத்து: இனி, அவன் நம்பால் அன்புடையனாவான் என்னும் நம்பிக்கையினையே முற்றவும் இழந்துவிட்டேன் என்பதாம்.

சொற்பொருள்: புதல் - புதர்; சிறு தூறு. நுடங்கும் - அசையும். குருகு - நாரைபோலும் வெண்ணிற நீர்ப்பறவை. புதுவோர் - புதியவரான பரத்தையர்; புதிதாகப் பரத்தைமைத் தொழில் மேற்கொண்டோர். மேவலன் - விரும்புதலை உடையான்; விருப்பம் - அவரை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகின்ற பெண்மைப்பண்பு; கற்பறம் பேணிக் காப்பதும் ஆம். வறிதாகின்று - வறுமைப்பட்டதாகின்றது; வறுமை, கணவனைப் பரத்தை கொள்ளத் தான் அவனை இழந்துவிடலான நிலை.

விளக்கம் : அவன். நம்மை இப்போது மறந்து திரியினும், என்றாவது நம்பால் அன்புடையனாகி மீள்வான் என்று நம்பியிருந்தேம். அவனோ, நாளும்நாளும் புதுவோரை வதுவை மேவலே தன் நினைவாகத் தொடர்ந்து திரிகின்றமையின், என் நெஞ்சம் அவனன்பை இழந்ததாகவே கொண்டு வறுமையுற்றது என்பதாம். புதர் வானம் போலக் கரிதாகவும், அதன்மேல் அசையும் வேழவெண்பூ வானிற்பறக்கும் குருகு போலவும் தோற்றும் என்க. 'வறிதாகின்று' என்றது, நெஞ்சம் உணர்விழந்து நினைப்பொழிந்து மகிழ்வழிந்து செயலற்றது என்றற்காம்.

உள்ளுறை : புதன்மிசை ஆடும் வேழ வெண்பூவானது, விசும்பாடு குருகுபோலத் தோன்றுமாறு போல, சேரிக்கண்ணே திரியும் பரத்தையரும், தலைமகனுக்கு, நம்போற் லமகளி ராகவே தோன்றுவர் என்று கூறியதாகவும் கொள்க.

புதன்மிசை நுடங்கும் வேழவெண்பூப்போலத் தலைவன் மிக அண்மையனாயினும், நம்மளவில் விசும்பாடும் குருகே