பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

53


போலச் சேணோன் ஆயினன் என்று வருந்திச் சொல்வதாகவும் கொள்ளலாம்.

நனவிலே வானவெண்குருகாக நமக்கு எட்டானாயினும், கனவிலே புதன்மிசை வேழ வெண்பூப்போல அணியனாகத் தோன்றி நம்மை மயக்கி, மேலும் நலிவிப்பவன் என்பதும் ஆம். நனவிலே அன்பற்றானாயினும், கனவிலே அன்புடையனாகத் தோன்றி நம்மை நலிவிப்பான் என்பதும் ஆம்.

மேற்கோள்: தலைவனைப் பிரிந்ததற்கண்ணே தோழியிடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு 6.).

18. கண் அழப் பிரிந்தனன் !

துறை : பரத்தையிற் பிரிந்து வந்து, தெளித்துக் கூடிய தலைமகற்குப், பின் அவ்வொழுக்கும் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத், தலைமகள் சொல்லியது.

[து.வி.: பரத்தைமையாற் பிரிந்தவன். இல்லத்திற்கு மீண்டு வந்து, தலைவிக்குச் சமாதானம் கூறிக் கூடியிருந்தான். பின்னரும், முன்போலவே விட்டுப் பிரிந்தவன், மீண்டும் தலைவியை விரும்பித் தன் வாயில்கள் மூலம் செய்தியனுப்ப, தலைமகள் மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி யூரன்
பொருந்தும் மலர் அன்ன, என் கண் அழப்

பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே.

தெளிவுரை : கருங்கோரையைப் போன்ற செருந்தியோடு, வேழமும், கரும்பைப்போலக் காற்றினால் அசைந்தாடும் கழனிகளையுடைய ஊரன் தலைவன். அவன் என்னைத் தெளிவித்துக் கூடியபோது, 'இனிப் பிரியேன்' என்று உறுதிமொழி கூறியவன். இப்போதில், இணைமலர் போன்ற என் கண்கள் அழும்படியாக, என்னைப் பிரிந்து போயினான் அல்லனோ!

கருத்து. அவன் சொல்லை அந்நாள் மெய்யெனக் கொண்டதற்கே இப்போது நோவேன்.