பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

ஐங்குறுநூறு தெளிவுரை


'வேழ வெண்பூவின் தீமணம் மாவின் நறுமணத்தை அழிக்குமாறு போலப், பரத்தையரின் பொய்ச் சாகசங்கள் என் பெருமையைத் தலைவனுக்கு மறைப்பவாயின என்பதும் ஆம்.

குறிப்பு: பரத்தையரின் புணர்குறியோடு. இல்வந்தானைக் கண்டதனாலே வெதும்பிக் கலங்கிக் கண்ணீர் உகுத்தனள் என்பதும், அன்னவனோடு மீண்டும் ஒன்றுபடுதல் இலையென்று வாயின் மறுத்தாள் எனவும் கொள்க. 'பெருஞ்சினைப் புணர்ந்தோர்' என்பதற்கு, பெருஞ்சினையின் நீழற்கணணே கூடினோர் எனவும் பொருள்கொள்வது ஏலுமேனும், அது களவுப் புணர்ச்சியாகலின், பொருள் சிறவாமையாகி விடும்.

20. நெகிழ்பு ஓடும் வளை !

துறை : தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாரயினும், அவர் திறம் மறவாது ஒழிதல் வேண்டும்' என்று முகம் புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது.

[து.வி.: 'காதலர் செயல் கொடியதே யாயினும், அவர் நமக்கு முன்செய்த தண்ணளியை நாம் மறத்தல் கூடாது; அவரை மீண்டும் ஏற்பதே நின் கற்பறக் கடமை' என்கின்றாள் தோழி. அவளுக்கு, 'அவரை நெஞ்சிற்கொண்டதன் பயன் கைவளைகள் இதோ கழன்றோடுகின்றன காண்' என்று கூறுகின்றாள் தலைவி.]]

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்,
காம்பு கண் டன்ன தூம்பிடை, வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளி, என்

இறையேர் எல்வளை நெகிழ்போ டும்மே.

தெளிவுரை: ஆறாகிய சிறிய கால்களையும் அழகிய சிறையையும் உடைய தும்பியானது, நூறு மடல்களையுடைய தாமரைப்பூவின்கண்ணே இட்டுள்ள முட்டைகளைச் சிதைக்கும், மூங்கிலைக் கண்டாற்போன்ற உள்ளே துளையினையுடைய வேழம் செறிந்த துறைக்குரிய ஊரன், தலைவன். அவனை நினைந்து, என் முன்கையிற் பொருந்திய, அழகும் ஒளியும் உடைய வளைகளும் நெகிழ்ந்து கழன்று தாமே வீழகின்றனவே!