பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60

ஐங்குறுநூறு தெளிவுரை


அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, இனி

'நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!

தெளிவுரை: "அன்னையே! சேற்றிலே அளைந்தாடிய புள்ளிகளையுடைய நண்டானது, முள்ளிச்செடியின் வேர்ப்புறத்தான தன் வளையினிடத்தே சென்று தங்கும் ஊருக்குரியவனான தலைவன், நன்மையான சொற்களை நாம் தெளியுமாறு சொல்லி, நம்மையும் முன்னர் மணந்து கொண்டனன்; இப்போதும், 'நின்னைப் பிரியேன்' என்று அவன் சொன்னது தான் எதனாலோ?"

கருத்து: 'அவன் சொன்னது, அவன் பிரியும் - குறிப்புக் கொண்ட மனத்தினன் என்பதைக் காட்டுகின்றதேயாம்.'

சொற்பொருள்: அள்ளல் - சேறு. அளை - வளை. நீயேன் - நீத்துச் செல்வேன். அன்னாய் : தோழியைக் குறித்தது. முன்னர்த் தோழி தலைவியை அன்னாய் என்றனள். இவ்வாறு பெண்களை 'அம்மா' என்று அழைப்பது தமிழர் மரபாகும்.

உள்ளுறை : களவன் அள்ளலாடிச் சேறுபட்டதை நிலையாதே, முள்ளி வேரளைக் கண்ணுள்ள தன் அளையிற் புகுந்தாற்போலத், தலைவனும் பரத்தையரோடு இன்புற்றதன் அடையாளத்தோடேயே, தன் மனைக்கண்ணும் வந்து புகுவானாயினன்; அதுகண்டு ஐயுற்றாளை, 'நீயேன்' எனத் தேற்று வானாயினன் என்பதாம்.

சேறாடிய களவன் முள்ளி வேரளைச் செல்லும்' என்றது. பிறர் கூறிய அலர் கேட்டும் அஞ்சாது, தலைவன், பரத்தையர் மனைக்கனி தொடர்ந்து செல்வானாவான் என்றதாம்.

23. தாக்கணங்கு ஆவது ஏனோ?

துறை : இதுவும் அதே துறை.

முள்ளி வேரளைக் களவன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்
தேற்றஞ் செய்து, நப் புணர்ந்து, இனித்

தாக்கணங் காவது எவன்கொல்? அன்னாய்!