பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

65


[து - வி. தலைமகனுக்காகப் பரிந்துரை செய்யச் சென்றவர், 'நின் சினத்திற்கு அவன் பொருந்தவே நடந்து, நினக்குக் கொடுமையே செய்தான். என்று, தலைவியின் புலவிக்கு இசைவதுபோலத் தலைவனைப் பழித்துச் சொல்லு கின்றனர். அவ்விடத்தே, 'அவன் இயல்பு அஃதில்லையே? எப்படி இவ்வாறு அவன் ஆயினான்? என்று தலைவி, தோழியிடத்தே அவனைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது இச்செய்யுள்.]

கரந்தையஞ் செறுவில் துணைதுறந்து, களவன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்?- அன்னாய்!

தெளிவுரை: "அன்னையே! கொட்டைக் கரந்தையையுடைய அழகிய வயலினிடத்தே, தன் துணையான பெட்டை நண்டைத் துறந்து களவன் செல்லும். அப்படிப் போகும் களவன், அயலேயுள்ள வள்ளைக் கொடியினது மெல்லிய தண்டினையும் அறுத்துப்போகின்ற ஊருக்கு உரியவன் தலைவன். அவன், எம் இயல்பையும், பரத்தையரின் இயல்பையும் அறியாத தெளிவற்ற நிலையினனாயினான். அவன் இங்ஙனம் தீச் செயலுடையனாவதற்குக காரணந்தான் யாதோ?"

கருத்து: 'அவன் இவ்வாறு புறத்தொழுக்கிலே செல்லுதற்கும், பலர்க்கும் தீச்செயலே செய்தற்கும், யாதுதான் காரணமோ?' என்பதாம். அது அவன் நட்பாகக் கூடினார் கெடுத்த கேடு என்பது கருத்து.

விளக்கம்: பொதுவாக, வாயிலோர் தலைவனைப் போற்றிக் கூறுதலே அல்லாது, அவன் கொடுமைகூறிப் பழிப்பது என்பது கிடையாது. ஆனால், மனைவிக்கு உறுதி கூறுமிடத்து. இவ்வாறு தலைவனைக் குற்றம் கூறுதலும உண்டு என்பர் (தொல். பொ. 166) இனி, பண்போடு நடக்கும் தலைவனுக்கேகூடத், தன்னிடத்தே உளம் அழிந்தாளொருத்தியை அடங்கக் காட்டுதலான செயலிடத்தே, புறத்தொழுக்கம் உளதாவதும் இயல்பு என்பதும் விதியன்பர் (தொல்.பொ.150.). அவ்விதப் படி நடந்தானோ என்று தலைவி ஐயுற்றதாகவும் நினைக்க. . சொற்பொருள்: கரந்தை - ஒருவகைக் குத்துச் செடி; கொட்டைக்கரந்தை எனவும், கொட்டாங்கரந்தை எனவும்

ஐங். - 5