பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



70

ஐங்குறுநூறு தெளிவுரை


எழுந்த இல்லறக்கடமையின் செவ்வியான கற்பு மேம்படுதலை வரைவெதிர் கொள்ளாதே வரைவுடன்படற்கு மறுத்தாராய்த் தமரே சிதைக்கின்றனர் என்பதாம்.

30. பெருங்கவின் இழப்பது ஏன்?

துறை : இதுவும் மேற்காட்டிய துறைச் செய்யுளே.

வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்
தண்ணக மண்அளை நிறைய, நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்

பெருங்கவின் இழப்பது எவன்கொல்? - அன்னாய்!

தெளிவுரை: "அன்னையே! வேம்பின் பூவரும்பைப்போன்ற நெடுங்கண்களையுடைய அலவனின் குளிர்ந்த உள்ளிடத்தையுடைய, மண்ணிடத்து அளையானது நிறையும்படியாக, நெற்பயிரின் மிகுதியான பூக்கள் உதிர்ந்து கிடக்கும் விளைவயல்களையுடைய ஊரன் தலைவன். அவன் பொருட்டாக, நின் மகள் தன் பேரழகினை இழப்பதுதான் எதனாலோ?"

கருத்து அவனே, இவளது கணவன் ஆதற்குரியன்; அதனால் வரைவுக்கு உடன்படுதலைச் செய்வீராக.

சொற்பொருள் : வேம்புநனை - வேம்பின் பூவரும்பு: இது நண்டின் கண்ணுக்கு நல்ல உவமை; 'வேம்பு நனை அன்ன இருங்கண் நீர் ஞெண்டு' என்று அகமும் இதனைக் கூறும் (அகம். 176). உறைக்கும் - உதிர்ந்து கிடக்கும். கவின் - பேரழகு; காண்பார் உணர்வு முற்றும் தன்பாலதாகவே கவியுமாறு மயக்கும் வசியப் பேரெழில்.

விளக்கம் : அலவனின் கண்ணுக்கு வேம்பு நனையை உலமை கூறியது, வேம்பு பூக்கும் காலம் மணம் செய்தற்குரிய நற்காலமும ஆகும் என்று புலப்படுத்துதற்காம்.

மேற்கோள்: மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது; தோழி அறத்தொடு நின்றது எனக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். 12).

உள்ளுறை : 'அலவனின் மண்ணளை நிறைய வயலிடத்தின் நெற்பூ உதிர்ந்து கிடத்தலைப் போலவே, தலைவனின்

மனையகத்தே, தீதின்றி வந்த குடியுரிமையான பெருஞ்செல்வம் நிரம்பிக் கிடக்கும்' என அவன் செல்வப் பெருக்கத்தினைக் கூறி வரைவுடம்படக் கூறியதாகவும் கொள்க.