பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

75


கருத்து: நம்மை மறந்தானை மறக்கமாட்டாதே நாம் ஏங்கிச் சோரும் நிலையான இதுதான் என்னையோ? என்பதாம்.

சொற்பொருள்: பொய்கை - நீர்நிலை. 'மானிடரால் ஆக்கப்படாது தானாகவே அமைந்த நீர்நிலை' என்பர் நச்சினார்க்கினியர். புழை - துளை. கால் - தண்டு; ஆம்பலின் தண்டு உள்ளே துளையுடையது என்பதனை, 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்' என்று (நற். 6) பிறரும் காட்டுவர். ஏர் ; உவம உருபு. வண்ணம் - நிறம்; அது பொன்னிறம்.

விளக்கம்: 'புழைக்கால் ஆம்பல்' என்று சொன்னது, அவ்வாறே உள்ளத்தே உள்ளீடான வலுவற்ற தன்மையன் தலைவன் என்று நினைந்து கூறியதும் ஆம். ஊர்ப்பொய்கை ஆம்பலின் தாது நாடிவரும் வண்டினத்துக் கெல்லாம் இனிமை தருவது போல, தலைவனும் தன்னை நாடிய பரத்தையர்க்கெல்லாம் இன்பம் அளிப்பானாயினான் என்பதுமாம்.

35. மாமைக் கவினும் பசந்ததே !

துறை : வாயிலாய்ப் புகுந்தார், தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுதுகாண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் செல்லியது இது.

[து. வி. :ஊடியிருப்பாளிடம், தலைவனுக்குப் பரிந்துபேசச் சென்றவர்கள், தலைவனின் சிறப்பினைப் பலவாகக் கூறி நிற்க, அதுகேட்டுப் பொறாதாளான தலைவி, 'இப் பொய்யுரை கேட்டேபோலும் என் மேனி பசந்தது' எனத் தன் தோழியிடம் கூறுவாள் போல, அவர்கள் பேச்சையும் மறுக்கின்றனள்.]

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதன் மன்னே!

இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே!

தெளிவுரை : 'தோழி. வாழ்வாயாக! நம் ஊர்ப் பொய்கையிடத்தேயுள்ள ஆம்பலின், நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டினுங் காட்டில் ஒளியுடையதாக முன்னர் இருந்தது என் மேனியின் மாமைக்கவின். அதுதான், இப்போது, இவர் கூறும்

பொய்யுரை பலவும் கேட்கவுந்தான் கெட்டழிய, அழகழிந்து பசந்ததே!