பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

77


உறுதிப்பாட்டினைப் பெற்றனவானால், அவனை நினையாதேமாய் மறந்து இருத்தல் நமக்கும் இயல்வதாகுமே!"

கருத்து: எம் கண்கள் பிரிவுத்துயரால் பசலையடையாதிருக்கப் பெற்றோமில்லையே; ஆகவே, அவனை ஏற்பதே செயத்தக்கது என்பதாம்.

சொற்பொருள்: 'அமைகுவானாயின்' என்றது, பரத்தையிடத்தேயே தங்கியிருக்கும் ஒழுக்கத்தனாயின் என்பதாம். ஒல்காவாகுதல் - தளராதிருத்தலைப் பெறுதல்.

விளக்கம் : அவன் பரத்தை வீட்டிலேயே தங்கிவிட்டாலும், தலைவியின் நெஞ்சம் அவனையே, அவனுறவையே தேடிப்போதல், அவள் கற்பறத்தின் செம்மையால் என்று கொள்க.

37. பொய்த்தல் வல்லன்!

துறை : 'தலைமகளைச் சூளினால் தெளித்தான்' என்பது கேட்ட காதற் பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத்தன் தோழிக்குச் சொல்லியது.

[து. வி. : 'தலைமகளைச் சூளுரை கூறித் தெளிவித்து, அவளுடன் கலந்து உறவாடி இன்புற்றான் தலைவன்' என்பதனைக் கேட்டாள் அவன் காதற்பரத்தை. அவள் உள்ளம் அதனாலே துடிக்கின்றது. தலைமகளின் தோழியர் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வதுபோல, இவ்வாறு வெதும்பிக் கூறுகின்றாள். அவள் தலைவனிடத்தே கொண்டிருந்த நம்பிக்கையும் இதனால் நன்கு விளங்கும்.]

அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பயந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்

தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லே!

தெளிவுரை: "தோழி! வாழ்வாயாக! மகிழ்நன், தான் செய்த சூள் பொய்யாத வகையில் நடந்துகொள்ளுதலையே என்றும் அறியமாட்டான். தன்னை விரும்பிய மகளிரின் மையுண்ட கண்கள் பசலை படர்ந்தவாய், நீர்த்துளிகளை மிகுதியாகச் சொரியும் வண்ணம், தான் அவர்க்குச் செய்த சூளுறவினைப் பொய்த்து, அவரை வருந்தச் செய்வதற்கே அவன் வல்லவன்!"