பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



78

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: தலைவன், செய்த சூளினைப் பேணாது ஒழுகும் வாய்மையற்ற தன்மையன் என்பதாம்.

சொற்பொருள்: நயந்தோர் - விரும்பியோர்; காதலித்த மகளிர். பயந்து - பசலைபூத்து; பசந்து என்பதும் பாடம். பனிமல்க - நீர் நிறைய. தேற்றான் - அறியான்; தன்வினைப் பொருளது. சூள்வாய்த்தல் - உரைத்த சூளுரை பொய்யாகாத படி பேணி அவ்வண்ணமே நடத்தல்.

விளக்கம்: 'காதற் பரத்தை' சேரிப் பரத்தையின் மகளாயினும், ஒருவனையே மனம் விரும்பி அவனோடு மட்டுமே உறவு கொண்டு, அவன் உரிமையளாக மட்டுமே வாழ்பவள். 'வல்லவன் வல்லவன்' என்று அடுக்கி வந்தது. அவன் சூள் பொய்த்தலே இயல்பாகக் கொண்டவன் என்றற்காம்; 'இனியும் இச்சூளும் பொய்ப்பன்; 'மீண்டும் தலைவியைப் பிரிந்து எம்மை நாடியும் வருவான்' என்று சொன்னதுமாம்.

38. தன் சொல் உணர்ந்தோர் அறியலன்!

துறை : 'தலைமகன் மனைவயிற் போகக் கருதினான்' என்பது சொல்லிய தன் தோழிக்குப், பரத்தை சொல்லியது.

[து. வி. : 'தலைமகன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதை நினைக்கின்றான்' என்று தோழி வந்து, அவன் பரத்தையிடம் சொல்லுகின்றாள். அவளுக்கு, அப் பரத்தை தான் கருதுவதைக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.]

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன்: என்றும்
தண்தளிர் வௌவும் மேனி,

ஒண்தொடி முன்கை, யாம்அழப் பிரிந்தே.

தெளிவுரை: தோழி, வாழ்வாயாக! குளிர்ச்சியான மாந்தளிரைப் போன்ற மேனியினையும், ஒள்ளிய வளைகள் அணிந்த முன்னங் கையினையும் உடையரான யாம், அவன் பிரிவினுக்கு ஆற்றாதே அழுகின்ற வண்ணமாக, அவன் எம்மைப் பிரியக் கருதினான் என்பாய். தலைவன் தான் தெளிவிக்கக் கூறிய சொற்களை வாய்ம்மையாக ஏற்றுக் கொண்டு தன்பால் அன்புசெலுத்திய மகளிரின் உளப்பாங்கினை அறிகின்ற அறிவானது என்றைக்கும் இல்லாதவனே யாவான்!