பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

79


கருத்து: ஆகவே, அவன் அப்படிப் பிரிந்து போதலும் அவனது இயல்பேயாகும் என்று ஆற்றியிருப்பேம் என்பதாம்.

சொற்பொருள் : தன்சொல் - தெளிவித்து முதற்கண் கூடியபோது, தான் சொல்லிய உறுதிமொழிகள். உணர்ந்தோர் - வாய்மையாகக் கொண்டோர்.

விளக்கம் : தன்மாட்டு அன்புடையாரைப் பிரிதலால், அவர் அடையும் மனத்துயரங்களைப் பற்றி எல்லாம் அறியும் அறிவற்றவன் தலைவன். ஆதலால், அவன் செயலைக் குறித்து யாம் ஏதும் நோதற்கில்லை; நம் பேதைமைக்கே வருந்துதல் வேண்டும் என்பதாம். தளிர் மேனி வண்ணம் கெடும்; ஒண்தொடி முன்கை மெலியத் தொடிகள் கழன்றோடும்; என்பதனைக் குறிப்பால் உணர்த்தவே, அவை சுட்டிக் கூறினாள். இவளைக் காதற் பரத்தையாகவோ, உரிமைப் பரத்தையாகவோ கொள்வதும் பொருந்தும்.

39. பிரிந்தாலும் பிரியலன்!

துறை : ஒருஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, அவன் பெண்மைநலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான் என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தன் தோழிக்குச் சொல்லியது.

[து. வி. : தலைவன் வீடு திரும்பியதால், தலைவி அவன் உறவைப் பெற்று ஆறுதலும் பெற்றாள்; 'பெண்மை நலமெல்லாம் விரும்பியவாறு அவன் துய்த்துவிட்டான்; இனி அறக்கடன்மேல் தன் மனஞ்செல்லலாலே நம்பால் வந்தான்; இனி நம்மைப் பிரியான்' என்று அவள் தோழியரிடம் கூறினாள். இதனைக் கேள்விப்பட்ட பரத்தை, தன் தோழியிடம் சொல்வது போலத், தலைவிக்கு நெருங்கியோர் கேட்டுக் கலங்குமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம்முலை அடைய முயங்கி, நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்

பிரிந்தன னாயினும், பிரியலன் மன்னே!