பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



80

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : தோழி வாழ்வாயாக! ஊரனானவன், விருப்பந்தரும் நம்முடைய மார்பகங்கள் அழுந்துமாறு முற்றத் தழுவி இன்புற்றனன். அவன் நம்மிடத்திலிருந்தும், திருத்தமான அணிகளணிந்த நம் பெருத்த தோள்கள் நெகிழும்படியாகப் பிரிந்தனன் என்றாலும், விரைவில் நம்பால் மீள்வானாதலின், முற்றவும் நம்மைப் பிரிந்தவன் அல்லன்காண்!

கருத்து: அவன் மீண்டும் நம்பால் விரைய வருவான் என்பதாம்.

சொற்பொருள் : வெம்முலை - விருப்பத்தை விளைக்கும் கவின்பெற்ற மார்பகம். அடைய - முற்றவும் அழுந்தும்படி. பிரியலன் - புறத்தே பிரிந்தாலும், எம் தேஞ்சைவிட்டு என்றும் பிரிந்திலன்; இப்போது சில நாட்கள் பிரிந்தாலும், மீளவும் வரும் இயல்பினனாதலின் முற்றப் பிரிந்திலன் என்பதும் ஆம். நெகிழ்தல் - நழுவுதல்.

விளக்கம்: இதனைத் தன் பாங்காயினார் சொல்லக்கேட்கும் தலைவி, தன் நம்பிக்கை நிலையாதோவென்னும் ஏக்கத் தினளாவாள் என்பதாம். இதுவே பரத்தையின் விருப்பமும் ஆம்.

40. ஊரிறை கொண்டனன் என்ப!

துறை: "உலகியல் பற்றித் தலைவன். தன் மனைக்கண் ஒருஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று அயற்பரத்தையர் பலரும் கூறினார்" என்பது கேட்ட காதற் பரத்தை, அவர் பாங்காயினார் கேட்பத் தான் தன் தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: உலகியலிலே செயற்குரியதான ஒரு செயலை முடிக்கக் கருதித்,தலைவன், ஒருசமயம் தன் மனைக்குப் போகின்றான். அதனை, அவன் தன் காதற்பரத்தையை முற்றவும் பிரிந்து தன் வீட்டிற்கே திரும்பினன. அங்கேயே மனைவியைப் பிரியாது இன்புற்றும் வாழ்கின்றனன்' என்று அயற்பரத்தையர் பலரும் தம்முள் பேசிக்கொள்கின்றனர். இதனைக் கேள்வியுற்ற அவன் காதற்பரத்தை, அந்த அயற்பரத்தையரின் பாங்காயினார் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது.]