பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

83


பொய்கையினை உடையது தலைவனின் ஊர்' என்பார்கள். அதனாலே, தன் சொல் உணர்ந்து அன்புசெய்தாரின் மேனியைத் தன் பிரிவாலே பொன்போலும் பசப்பினை அடைவிக்கும் கொடுமையினை அவனும் செய்கின்றான்?

கருத்து: 'அவன் பேச்சை நம்பும் மடமையள் அல்லேன்' என்று வாயில் மறுத்ததாம்.

சொற்பொருள்: அன்பில் - அன்பில்லாத. வெண்பூ - ஆம்பற்பூ. தன்சொல் உணர்ந்தோர் - அவன் சொல்லை (பிரியேன் என்ற சூளுரையை) உண்மையெனக் கொண்டு, அவனுக்குத் தம் காதலை உரிமையாக்கிய மகளிர். 'மேனி' - மேனியின் நிறத்தினை. 'பொன் போற் செய்தல்' - பிரிவுத் துயரால் மேனியிற் பொன்னிறப் பசலை பூக்கச் செய்தல்.

விளக்கம் : முதலை தன் பார்ப்பைத் தின்னும் கொடுமையது என்பது முன்னும் கூறப்பெற்றது (ஐங். 24). பொய்கைத்து - பொய்கையை உடையது; மருதத்திலே வற்றாத நீர்வளம் கொண்ட நீர் நிலையை இதனால் காட்டுகின்றனர்.

உள்ளுறை: தானீன்ற பார்ப்பைத் தின்னும் கொடுங்குணமுடைய முதலையினைக் கொண்ட பொய்கையூரன் ஆதலின், தானே விரும்பி மணந்துகொண்ட தன் அன்பு மனையாளையும் வருத்தி நலிவித்து நலன் அழியச் செய்யும் கொடியவன் ஆயினான் என்று குறித்ததாகக் கொள்க.

தன் பார்ப்புத் தின்னும் முதலையும், வெண்பூவும் ஒருங்கிருக்கும் பொய்கையுடைய ஊரன் என்றது, தன்னை விரும்பி வருவாரையே பொன்னும் நலனும் உறிஞ்சிக்கெடுக்கும் பரத்தையரையும், மனை நலம்பேணும் குலமகளிரையும் ஒருங்கே ஒப்பாகக் கருதுபவனும் அவன் என்பதாம்.

மேற்கோள்: 'போல' என்பது உருவுவமத்திற்கு உரிய சொல்லாம் என இளம்பூரணனாரும் (தொல். உவம் 16); தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை என்பது இன்னும் தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று; வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்பது தலைமகள் பசப்புநிறம் பற்றி உவமையாயிற்று என்றும் கூறுவர். தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை என்பது தோழி கூற்று; என்னை! அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே, தலைமகள் பெரும் பேதையாதலின் என்றும், பேராசிரியர் விளக்குவர். இவ்வாறு தோழி கூற்றாகக் கொள்வதே நயமுடைத்தும் ஆகும்.