பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

85


சொற்பொருள்: மகிழ்மிக - மது மயக்கம் மிகுதியாக. யாணர் ஊர - புதுவருவாய் உடைய ஊரனே! மலிர்நிறை - புதுவெள்ளம்; 'செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறை காவிரி' என்று பதிற்றுப்பத்தும் கூறும் (பதிற். 50.). தொடங்கியோள் - தொடங்கினாள்.

விளக்கம்: 'யாணர் ஊர' என்றது, நின் ஊர் என்றும் புது வருவாயினைக் கொண்டதாதலேபோல, நீயும் என்றும் புதிதாகக் கொள்ளும் பரத்தமை உறவினை உடையை' என்று குறிப்பால் சொல்லிப் பழித்ததாம். 'மாண் இழை அரிவை' என்று பரத்தையைக் குறித்தது, அவை தலைவனின் கொடையால் அமைந்ததே என்று கூறற்கும், தான் அவையற்று விளங்கும் எளிமையினைக் காட்டற்கும் ஆம். 'மலிர்நிறையன்ன மார்பு என்றது, புதுவெள்ளம்போலப் பரத்தையர் பலரும் விரும்பிக் கலந்து ஆடிக் களித்து இன்புறுதற்குரியதாக நிலை பெற்ற மார்பு என்பதாம். விலக்கல் - தடுத்து ஒதுக்கல்.

"நீ பிறளான பரத்தையைக் கூடியதறிந்தே நின்னை விலக்குபவள், நீ இங்கு வந்தமையும் அறிந்தால் இன்னும் சினவாளோ? ஆதலின், நீதான் அவளிடத்தேயே மீளச் செல்வாயாக' என்று மறுத்ததாகக் கொள்க.

மேற்கோள்: ஆசிரியர் நச்சினார்க்கினியர், இதனைத் தோழி சொல்வதாகக் கொண்டு உரைப்பர் (தொல். பொருள். 240). "காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறு என்னை?' எனத் தலைவியை உயர்த்துக் கூறித், தலைவனை ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றாள் தோழி" என்று அப்போது கொள்க.

43. நின்னினும் பொய்யன் நின் பாணன்! துறை : பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப, மறுத்த தலைமகள். பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது.

[து. வி. : தலைவனுக்காகப் பரிந்து பன்முறை இரந்து வேண்டிய பாணனிடம், தான் இசையாமையே சொல்லிப் போக்கினாள் தலைமகள். ஒரு நாள், அப் பாணனோடு தலைவனும் சேர்ந்துவந்து, பலப்பல கூறித், 'தலைமகளின் புலவியைத் தணிவிக்க முயல்கின்றனன். அப்போது, தலைவி, தலைவனை நோக்கிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]