பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



86

ஐங்குறுநூறு தெளிவுரை


அம்பணத் தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப்பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்

பாணன் பொய்யன்; பல சூளினனே!

தெளிவுரை : 'மரக்காலைப் போலத் தோன்றும் தாய் ஆமையின் முதுகின்மீது, சிறு செம்பினைப் போன்றவான அதன் பார்ப்புகள் பலவும் ஏறிக்கிடந்தபடி உறங்கியிருக்கும், புது வருவாயினை உடைய ஊரனே! நின்னைக் காட்டினும், நின் ஏவலோடு வந்தானான நின் பாணன் பொய்யன்; பல பொய்ச் சூளினன்!

கருத்து: பொய் கூறலிலும், உரைத்தலிலும், நின்னினும் நின் பாணனே வல்லவ என்பதாம்.

சொற்பொருள்: அம்பணம் - மரக்கால்; தரகர் அளக்கும் மரக்கால் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு 14, 209-10). செம்பு - சிறு செப்புப் பாத்திரம்; ஆமைப் பார்ப்பிற்கு உவமை; செம்புசொரி பானையின் மின்னி' என்பது நற்றிணை (நற். 153). சூள் - தெய்வம் சார்த்திக் கூறும் உறுதிமொழி.

விளக்கம்: 'பாணன் தலைவனின் உயர்வே கூறித் தலைவியை இரந்து நின்று சூளுரைப்பான்' என்பதால், தலைவனைக் காட்டிலும் அவன் சொற்களில் பொய்ம்மை மிகுதியாகவும், பொய்ச்சூள் பலவாகவும் விளங்கித் தோன்றும் என்க. தலைவன் தலைவியின் இசைவுபெறுதற்குத் தாழ்ந்தும், குறையேற்றுப் பொறுத்தருளவும் வேண்டலும் கூடும். இவை பாணற்கு மரபன்று என்க.

உள்ளுறை: 'ஆமைப் பார்ப்புகள் அவற்றின் தாய் முதுகின்மேற் கிடந்து உறங்கும் வளமிகுந்த ஊரன்' என்றது. அவ்வாறே அவன் புதல்வனும் தன் தாயின் மார்பிற்கிடந்து உறங்குதலை அறிந்துவைத்தும், குலநலமும், இல்லறக் கடனும் மனைவிக்கு மகிழ்வளித்தலும் மறந்து, தன் காமவின்பமே போற்றிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடப்பானாயினான் தலைவன் என்றதாம்.

44. அறிந்தனையாய் நடப்பாயாக!

துறை: பரத்தையரின் மனைக்கண்ணே பன்னாள் தங்கித் தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத், தோழி கூறியது.