பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

87


[(து. வி.: பரத்தையரின் வீடே கதியாகப் பலநாள் தங்கியிருந்த தலைவன், அதுவும் வெறுத்ததாகத் தன் மனைக்கு ஆவலோடு வருகின்றான், அவன் செயலைக் குறித்துப் பழித்து, அவன் வரவை மறுக்கும் தோழி, அவனிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசினா அங்கு
அதுவே ஐய, நின் மார்பே;

அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.

தெளிவுரை: ஐயனே! இனிய நீரையுடைய பெரிய பொய்கையினிடத்தேயுள்ள ஆமையின் இளம் பார்ப்பானது. தன் தாயின் முகத்தை நோக்கியே வளர்வதுபோல, நின் மார்பை நோக்கியே வாழ்பவள் தலைவி. அதனை அறிந்தாயாய் நடந்து கொள்வாயாக! நினக்குரிய அறமும் அதுவேயாகும்!

கருத்து: நீதான் அறத்தையும் மறந்தாய்; அன்பினையும் துறந்தாய் என்பதாம்.

சொற்பொருள்: தீம் பெரும் பொய்கை - இனிய நீருடைய பெரிய பொய்கை. தாய்முகம் நோக்கி - தாயின் முகத்தைப் பார்த்துப் பார்த்து. 'மார்’: அசைநிலை.

விளக்கம் : இனிதான பெருமையுடைய குடும்பத்தினளான நின் மனைவி நின் மார்பினை நோக்கி நோக்கி மகிழும் அந்த மகிழ்வாலேயே உயிர்வாழ்பவள் என்கிறனள். அதனை அவளுக்கு மறுத்த நின் செயல் மடமையானது, அறத்தொடும் பொருந்தாதது என்றும் கூறுகின்றனள். அதனால் தலைவி நலிய நிள் இல்லறமாண்பும் வளங்குன்றும் என்றனளுமாம்.

45. பசப்பு அணிந்த கண்!

துறை : நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகன், மனைவயின் சென்றுழித், தோழி சொல்லியது.

[து. வி. நெடுநாள் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்து வீட்டை மறந்திருந்த தலைவன், அவள் ஒதுக்கியதும். தன் வீட்டிற்கு வர, அவனுக்குத் தோழி சொல்லியது இதுவாகும். அவன் பொருந்தாச் செயலை எள்ளிக்கூறும் நயம் கொண்டதும் இச் செய்யுள் ஆகும்.]