பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



90

ஐங்குறுநூறு தெளிவுரை


47. நின் பொய் ஆயம் அறியும்!

துறை : பாணற்கு வாயில் மறுத்த தலைமகள். பின், அப்பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது.

[து. வி.: பரத்தைமை விருப்பினாலே தலைவியைப் பிரிந்திருந்தான் தலைவன். அவன், மீண்டும் தலைவிபாற் செல்வதற்கு விரும்புகின்றான். செய்த குற்றம் தலைவி மறுப்பாளென்ற அச்சத்தையும் கூடவே எழுப்புகின்றது. ஆகவே, தலைவியைத் தன் சினம் விட்டுத் தன்னை ஏற்குமாறு செய்துவரத் தன் பாணனை அவளிடம் தூது அனுப்புகின்றான். அவனை மறுத்துப்போக்கிய தலைமகள், பின்னர் அப்பாணனோடு தலைவனும் வந்து நின்று, தலைவிபால் தன் அன்புடைமை பற்றிப் பலபடியாகக் கூறத், தன் மனம் வெதும்பிச் சொல்லிய தாக அமைந்தது இது.]

முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர!
மாணிழை யாயம் அறியும் - நின்

பாணன் போலப் பலபொய்த் தல்லே!

தெளிவுரை : முள்ளின் முனைபோலும் கூர்மையான பற்களையுடையவள் பாண்மகள். அவள் இனிய கெடிற்றுமீனைக் கொணர்ந்து சொரிந்த அகன்ற பெரிய வட்டி நிறையுமாறு. மனையோளானவள், அரிகாலிடத்தே விதைத்துப் பெற்ற பெரும்பயற்றை இட்டுக்கொடுத்து அனுப்புவாள். அப்படித் தந்து அனுப்புகின்ற தன்மையுடைய மகளிரையுடைய ஊரனே! நின் பாணனேபோல நீயும் பலபடப் பொய்யே கூறுதலைச், சிறந்த இழையணிந்த ஆயமகளிர் எல்லாருமே அறிவார்களே! யான் எவ்வாறு நின் பேச்சை மெய்யாகக் கொள்வேன்? நின்னையும் உவந்து ஏற்பேன்?

கருத்து: நின் பரத்தைமைதான் ஊரறிந்த செய்தி யாயிற்றே என்பதாம்.

சொற்பொருள்: முள்ளெயிற்றுப் பாண்மகள் - முள்ளைப் போலக் கூர்மையான பற்களையுடையவளான பாண்மகள். கெடிறு - ஒருவகை மீன்; 'கெளிறு' என்பார்கள் இந்நாளில்.