பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

93


இங்கு வந்தமையால், நின்னை ஏற்க விரும்பேம் என்பதுமாம். அவர் உறவினை நீ முற்றக் கைவிட்டுப் பின்னர் மனையிலேயே தங்குவோனாக எம்பால வருவாயாயின், யாம் நின்னை உவந்து ஏற்பேம் எனக் குறிப்பாகக் காட்டிக் கூறியதாகவும் கொள்க.

49. யார் நலன் சிதையப் பொய்க்குமோ?

துறை: பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள், தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது.

[து.வி.: 'பாணனின் வழியாகவே தலைமகன் பரத்தையோடு உறவுபெற்று, அவளைக் கூடியிருப்பானுமாயினான்' என்று தன் தோழியர் வந்து சொல்லக் கேட்டாள் தலைமகள். தனக்கும், அவ்வாறே தன் காதல் உடைமையைச் சொல்வதற்கு. அதே பாணனைத் துணையாகக் கொண்டுவந்த தலைமகனுக்கு, உளம் நொந்து அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்

யார்நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?

தெளிவுரை : அழகிய சிலவாகிய கூந்தலையும், தலைச்சுமையின் பாரத்தாலே அசைந்தசைந்து நடக்கும் நடையையும் கொண்டவளான பாண்மகள், சிலவான மீன்களைச் சொரிந்து பலவான நெல்லைப் பெற்றுச் செல்லும் வளமிகுந்த புது வருவாய் நிரம்பிய ஊரனே! நின் பாண்மகன், இனி யார்யார் நலமெல்லாம் சிதைந்து போகுமாறு பொய்யுரைத்துத் திரிவானோ?

கருத்து: 'அவன் இன்னும் தன் பொய்யால் யாரைக் கெடுப்பானோ?' என்பதாம்.

சொற்பொருள்: அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய. அசைநடை -அசைந்து அசைந்து நடக்கும் ஒருவகைத் தளர்நடை. நலம் - பெண்மைநலம்.