பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

95


யாங்களும், இல்லறக் கடனாற்றுதலின் பொருட்டாக நின் துணையோராகிய நின்பால் அன்புகொண்ட பிறரும், பயன் பெறுதலின்றி வருந்தா நிற்கின்றேமே!

கருத்து: நின் அன்பை இழந்தாளான இவள் வருந்தி மெலிந்து அழுதவாறே இருப்பாளாயினள்; நின் நெருக்கம் இழந்த துணைவரும் இவளுக்கு நீ செய்த கொடுமை கண்டு வாடுவாராயினர்; நின் பெருஞ்செல்வமும் இவள் மனவூக்கமிழந்ததாலே, யார்க்கும் பயன்படுதலின்றிப் பாழே கிடக்கின்றது; நின் பெருமையிலே இவள் வாழ்வு சிறக்குமென்று கருதி, நினக்கு இவளைக் கூட்டிவைத்தலிலே ஆரம்பமுதல் உதவிசெய்த யாமும் வருந்துகின்றோம். ஆகவே, எமக்குத் தஞ்சம் அருள்வதற்கு இரக்கமுற்று முற்படுவாயாக என்பதாம்.

சொற்பொருள்: துணையோர் - ஆயத்தார்; இவர் தலைவிக்குப் பெலவகையானும் ஏவற்கடமைகளைச் செய்து, அவளது மனைவாழ்வின் செம்மைக்குத் துணையாக அமைந்து விளங்குவோர். யாமும் - தோழியராகிய யாமும்; இவர் தலைவியோடு நெருங்கிப் பழகி உயிர்க்குயிரான அன்பு பூண்டிருப்பவர். செல்வம் மனையிடத்துள்ள பலவான பொன்னும் பொருளும் ஆகும் வளமை. வஞ்சி - ஒருவகை மரம்; மருதத்திற்கு உரியது. துணையோர் - தலைவனுக்குத் துணையாகி அமைந்தும், அவன் துணை பெற்றும், பொருள் செய்து கொள்ளும் செய்வினைக் கூட்டுறவுப் பான்மையோர் என்பதும் ஆம். அவன் அக்கடமையும் மறந்து பரத்தனாகவே மயங்கித் திரிதலால், அவர் ஈட்டும் செல்வநலமும் குன்றலாக, அவரும் அதனாலே நொந்து வருந்துவாராயினர் என்பதாம்.

விளக்கம் : 'வஞ்சி ஓங்கிய யாணர் ஊர' என்றது, வஞ்சி மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் புது வருவாய் மிக்க ஊரன் என்பதுடன், 'வஞ்சி, கொடியுமாதலால்' மென் கொடி போலும் 'வஞ்சியரின் புகழாலே சிறப்புற்றிருக்கும் இல் வளமுடைய ஊரன்' எனவும் பொருள்தந்து, தலைவனின் அறத்திற்கு மாறான புறவொழுக்கத்தைப் பழித்ததும் ஆகும்.

நின் நெஞ்சம் தனதாகவே முன்பெற்றிருந்த இவளும் அதனைத் தானிழந்தாளாகி மிகுதியாக அழிவாயினள்; ஆதலின் நீதான் இவட்குத் தஞ்சமாக அமைந்து அதனை மீளவும் தந்து அருள்வாயாக' என்று வேண்டியதாகவும் கொள்ளப்படும்.