பக்கம்:ஐந்திணை வளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 97 வரமாட்டான் என்று யான் சொன்னது மெய்யாகி விட்டது. அவன் நின்னை மறந்துவிட்டான். வேறொருத்தி எவளாவது கிடைத்திருப்பாள். அவன் நேர்மையாளன் ஆகான். அவன் வஞ்சகன். அவனை மறந்துவிடு' என்கின்றாள். 'தோழி! அவனை வஞ்சகன் என்று பழித்துரைத்தலைச் செய்யாதே. அவன் வஞ்சகனாயின் என் உள்ளத்திலே அவன் இடம் பெற்றிருக்கவே மாட்டான். குறித்த நேரத்தை மறந்திருப்பான். வேறு எதுவும் செய்திரான்’ என்கின்றாள் தலைவி. 'குறித்த நேரத்தை மறந்து விடுவதென்றால்? நின்னைப் பற்றிக் கருதாத அவனது மனப்போக்கினை என்னென்று உரைப்பது? நின்வருத்தத்தை உணராதபேதைமை உடையவனா அவன்? என்று தோழி சற்றுக் கடுமையாகவே கேட்கின்றாள். 'அப்படிதான் இருக்கட்டுமே; அவன் வஞ்சகன் என்றில்லாமல், பேதையனாக அமைவது கூட நல்லது தானே' என்கின்றாள் தலைவி. தலைவியின் காதற்பாசத்தை உணர்கின்ற தோழி, மீளவும் பேச்செழாது நின்று விடுகின்றாள். தலைவியின் உள்ளத்தைக் காட்டுவது இச்செய்யுள். ஒழுகு திரைக்கரை வான்குருகின் தூவி உழிதரும் ஊதை எடுக்குந் துறைவனைப் பேதையான் என்றுணரும் நெஞ்சும் இனிது உண்மை ஊதியம் அன்றோ உயிர்க்கு? 'நீர் ஒழுக்கத்தையுடைய அலைகளைக் கொண்ட கடற்கரையினிடத்தே, பெரிய கடற்பறவைகளின் இறகுகளினின்றும் சுழன்று வெளிப்படுகின்ற காற்றானது எடுப்பாக வீசிக்கொண்டிருக்கும். அத்தகைய ஊரினன் நம் தலைவன். அவனை 'வஞ்சகன்’ என்று உணரின் நம் நெஞ்சம் எத்துணை வேதனைக்கு உள்ளாகும்? அதனைக் காட்டினும், அவனைப் பேதைமையாளன் என்று உணரும் போது என் நெஞ்சமும் இனிதாக இருக்கிறதே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/105&oldid=761785" இலிருந்து மீள்விக்கப்பட்டது