பக்கம்:ஐந்திணை வளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 3

இந்தச் செய்யுட்கள், அந்நாளைய தமிழகத்தின் பெருவளத்தின் உயர்வினையும், அக்காலத்தே வாழ்ந்த தமிழ்க் குடியினரின் சால்பையும் அவர்தம் உள்ளவுணர்வுகளையும் சொல்லோவியங்களாகச் சுவைபடக் கூறுகின்றன. செய்யுட்களைத் தழுவி, ஓரளவிற்கு அவற்றைவிளக்கிக்காட்டித் தமிழன்பர்களை இன்புறுத்துவதே இந்த நூலின் நோக்கம்.

செய்யுட்களின் கருத்தை உணர்ந்து கொள்ள இந்த நூல் உதவும். ஆனால், ஐந்திணை ஒழுகலாறுகளின்நயத்தை முற்றவும் அறிந்து இன்புற வேண்டுமானால், கருத்துக்களை யொட்டிய காட்சிகளை ஒவ்வொன்றாக மனத்தே கற்பித்துக் கொண்டு, அந்தத் தலைவன் தலைவியரிடையே நாமும் கலந்து நின்று அனுபவித்தல் வேண்டும். அதுவே, உண்மையில் ஐந்திணை வளத்தை அனுபவிப்பதாகும். தமிழ் அன்பர்கள், இதனை மனத்துட் கொண்டு எல்லா இலக்கியச் செல்வங்களையும் கற்றறிவதற்குப்பழகுதல் வேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் இலக்கியவளத்தினராகிக்களிப்படைவதுஎளிதாயிருக்கும்.

கடவுள் வாழ்த்து

எண்ணுவன எல்லாம் இனிதாக முடிதலைத்தான் நாம் அனைவரும் விரும்புவோம். நம் விருப்பம் அதுவானாலும், நம் விருப்பப்படியே நாம் எண்ணுவன அனைத்தும் முடிவதில்லை. இடைப்படும் இடையூறுகளும் தடைகளும் நம்மைக் கவலைகொள்ள வைத்துவிடுகின்றன. இவற்றை எப்படி நீக்க முடியும்? அது நம்முடைய ஆற்றலுக்கு உட்பட்டதாக இருந்தால் நாம் அதைப் பற்றிக் கவலைப்படவே மாட்டோம். ஆனால், நம்மால் வருங்காலத்தைச் சிந்திக்க முடிவதில்லை. எதிர்காலத்தில் வருகின்ற இடையூறுகளை வராமற் காப்பதற்கும் நம்மால் இயலாது. ஆனால், நமக்கு அத்தகைய தகுதியுடைய ஒப்பற்ற துணை வேண்டும். இந்தத் துணையாக இருக்கக் கூடியவன் விநாயகப் பெருமான் ஒருவனே ஆவான். விக்கினங்களைப் போக்கி அருளுகின்ற தனிச் சிறப்பு உடையவன் அவன்! அதனால், அவன்மீது பொறுப்பைச் சுமத்திவிட்டு நாம் நம் வேலையைக் கவலையின்றித் தொடங்கலாம். இந்த முறையிலே, களிற்று முகவனைப் போற்றுகின்ற செய்யுள் இந்தக் கடவுள் வாழ்த்து ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/11&oldid=1540592" இலிருந்து மீள்விக்கப்பட்டது