பக்கம்:ஐந்திணை வளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஐந்திணை வளம் ஒருநாள் இரவு நேரத்திலே, உறக்கம் வராது அவனையே நினைந்து நினைந்து புலம்பியவளாகத் தன்னுடைய பழைய அழகெல்லாம் தேய்ந்துபோன நிலையை நினைந்து வாடியவளாக, அவள் இருக்கிறாள். அப்பொழுது, அவள் வீட்டின் அருகே இருக்கின்ற பனை மரத்தின்மேல் அன்றிற் பறவைகளின் ஆரவார ஒலி எழுகின்றது. அவ்வொலியினைக் கேட்டதும் அவள் உள்ளத்து வேதனையும் மிகுதியாகின்றது. அன்றிற் பறவைகள் ஒன்றையொன்று பிரியின் உயிர் வாழ்ந்திராத தன்மையன, அதனை எண்ணும்போது, பிரிந்திருக்கும் தன்னுடைய நிலைமை அவளுக்குப் பெரிதும் வேதனையைத் தருவதாகக் கனலுகின்றது. அப்பொழுது, உடனிருந்த தோழி, தலைவனிடம் சென்று, தலைவியின் நிலையைக்கூறி, அவனை விரைய வரச்செய்யும்படியாக அன்றிலிடம் வேண்டிக்கொள்ளுகின்றாள். “தெளிந்த நீரைக்கொண்ட கரிய கழியினிடத்தே, வேண்டுமளவுக்கு இரையினை உண்டு விட்டு வந்து பனைமரத்தின் மேல் தங்கியிருக்கின்ற, வளைந்த வாயினையுடைய, என்றும் பிரியாது துணையோடு கூடியிருக்கும் இயல்பினையுமுடைய அன்றிற்பறவையே! "இளமையின் தன்மையான மழலைச்சொற்களைப்பேசும் இயல்பினையுடைய நின் தலைமகளின் அழகினை எல்லாம் கைக்கொண்டுவந்தனையே! அழகிழந்து அவள் நலிகின்றனளே! அதனால், கன்னிமையாகிய அவள் அழகினைக் கவர்ந்து வந்த நீ அதனையாவது திருப்பித் தந்து விடுக என்று கோவைப்படுத்தித், தண்ணிய நீர்த் துறைக்கு உரியவனான தலைவனிடம் சென்று சொல்வாயாக’ என்கின்றாள். தெண்ணி இருங்கழி வேண்டும் இரைமாந்திப் பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணர்அன்றில் தண்ணந் துறைவர்க்கு உரையாய் மடமொழி வண்ணந்தா வென்று தொடுத்து. தலைவியின் நலிவினைக் கண்டு, தானும் உளம் வருந்திய வளான தோழி, தலைவியைத் தெளிவிக்கும் பொருட்டாகவே அன்றிலை விளித்து இவ்வாறு கூறினள் என்று கருதுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/118&oldid=761799" இலிருந்து மீள்விக்கப்பட்டது